படகில் இருந்து இயந்திரம் திருடியவர் கைது
குழித்துறை, மே 16- கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகில் இருந்து இயந்திரத்தை திருடி விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் றொனால்டு. இவருக்கு சொந்தமாக நாட்டுப் படகு ஒன்று உள்ளது. இந்த படகில் இயந்திரத்தை பொருத்தி தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது வழக்கம். அதன்படி மே 15 புதனன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற றொனால்டு தொழிலை முடித்து கரைக்கு வந்து தனது படகு மற்றும் அதன் இயந்திரத்தை படகிலேயே வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை மீண்டும் கடலுக்கு செல்வதற்கு இரையுமன்துறை கடற்கரை பகுதிக்கு வந்து பார்த்த போது தனது படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ருபாய் மதிப்புடைய இயந்திரத்தை காணவில்லை. இது குறித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த னர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலமுறை துறைமுகத்தை சுற்றி வந்தது காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த வில்சன் என்றும் றொனால்டு படகில் இருந்த இயந்திரத்தை திருடியது தான்தான் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார் இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்து இயந்திரத்தை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
மழையால் தாமதமாகும் மேம்பால சீரமைப்பு பணி
மார்த்தாண்டம் நெரிசலில் திணறும் பொது மக்கள்
குழித்துறை , மே.16- மார்த்தாண்டம் மேம்பா லம் சீரமைக்கும் பணி மழை காரணமாக தாமதமாவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் திணறி வரு கிறார்கள். மழையின் வேகம் குறைந்த பிறகு பாலத்தின் மேல்பகுதியில் தார் போடப்பட உள்ளது. அதன் பிறகு ஓரிரு தினங்களில் போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக தங்குதடையற்ற போக்குவரத்து வசதிக்காக நாடு முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகள் நான்கு மற்றும் ஆறு வழி சாலைகளாக விரிவு படுத்தப்பட்டன. கன்னியா குமரி மாவட்டத்தில் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்ட தால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இங்கிருந்து 2014 இல் மக்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட பொன்.ராதா கிருஷ்ணன் பாஜக அமைச்சர வையில் தலைவழி போக்கு வரத்து துறையின் இணை அமைச்சரானார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி நான்கு வழி சாலைப் பணியை துரிதப்படுத்தத் தவறினார். மாறாக சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், வணி கர், விவசாயிகள் சங்கங்க ளின் கடும் எதிர்ப்பை மீறி மார்த்தாண்டத்தில் இரும்பு பாலம் அமைப்பதில் ஆர்வம் காட்டினார். இதில் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந் தன. தரமற்ற முறையில் இந்த பாலம் கட்டப்பட்ட போதி லும் 2019 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு திறந்துவிட்டு பெரும் சாதனையாகக்கூறி பாஜகவினர் ஓட்டு கேட்ட னர். எனினும் வெற்றி கிடைக்கவில்லை. இம்முறை யும் இதையே சாதனையாக கூறினர். தேர்தலுக்கு முன்பு பாலத்தில் ஓட்டை விழுந்தி ருந்தால் பாஜக பெறும் ஓட்டி லும் பெரும் ஓட்டை விழுந்தி ருக்கும் என்கிறார்கள் வாக்க ளித்துவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மக்கள். இந்த நிலையில், தற்போது பாலததின் கீழ் பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட இதர போக்குவரத்து வாகனங்க ளால் கடும் நெருக்கடியும் நேர விரயமும் ஏற்பட்டு வருகிறது. மழை பெய்து வருவதால் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் சாலையில் விழுவதால் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கன ரக சரக்கு வாகனங்கள் சிரா யான்குழியிலிருந்து உண்ணாமலைக்கடை வழி யாக திருப்பி விடப்படுகிறது. மேம்பாலத்தில் போக்குவரத்து துவங்கினாலும் ,பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக் குறியாக உள்ளதால் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜுன் மாதம் பள்ளி கல்லூ ரிகள் திறக்கப்படும்போது கூடுதல் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்பதால் பாலத் தின் சீரமைப்புப் பணிகளை முடித்து உறுதித்தன்மையை பரிசோதித்து வாகன போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
திருநெல்வேலி, மே 16- மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தற்காலி கமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி வியாழக்கிழமை 16.05.2024 முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிக ளில் காற்றானது மணிக்கு 40 -45 கி.மீ வரை அதிகபட்ச மாக 55 கி.மீ வரை வீசக்கூடும். மற்றும் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆட்டை கடித்துக் குதறிய சிறுத்தை
திருநெல்வேலி ,மே 16- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அங்குள்ள மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். சமீப நாட்களாக இங்கு காட்டு விலங்குகளான யானைகள், கரடிகள் ,புலி, சிறுத்தை கள் போன்றவை அவ்வப்போது வந்து அட்டகாசம் செய்து வருகின்றன .இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வேம்பையாபுரம் பகுதியில் உள்ள வீட்டில் புதன்கிழமை கட்டப் பட்டிருந்த ஆட்டை வேட்டை யாடி சென்ற சிறுத்தை மலைப்பகுதியில் பாதி உட லோடு கடித்து குதறி வீசி சென்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை காட்டிற்கு சென்றபோது அங்கு ஆட்டின் உடல் கடித்து குதறியது தெரியவந்தது. இது குறித்து வனத்துறைக்கு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்த வாலிபர் பரிதாப சாவு
திருநெல்வேலி, மே 16- நெல்லை அருகே உள்ள மருதகுளத்தைச் சேர்ந்தவர் ராமையா மகன் சங்கரசுப்பு (36). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சங்கரசுப்புக்கும், அவரது உறவி னர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்தது. உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை அவரது உறவினர்கள் அபகரித்துக் கொண்ட தாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக அவர், போராடி வந்துள்ளார். மூன்ற டைப்பு காவல் நிலையத்திலும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 13ஆம்தேதி அன்று சங்கரசுப்பு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஆற்றை அழகுபடுத்த கட்டுமான பணி கள் நடைபெறும் இடத்திற்கு சென்று, பெட் ரோலை உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்தார். பின்னர் அலறியடித்தபடியே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலை நோக்கி ஓடிவந்தார். இதனைக் கண்டதும், அங்கு பாதுகாப்பு பணி யில் இருந்த போலீசார் தண்ணீரை எடுத்து அவரது உடலில் ஊற்றி தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் அவரை ஆம்புலன்சில் ஏற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரசுப்பு வியாழக்கிழமை மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தனிப்படை போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
தூத்துக்குடி, மே 16 தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேட் காட்டன் சாலையில் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் பால்ராஜ் (56) என்பவர் கடந்த 10.05.2024 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலை மையில் காவலர்கள் சுடலைமணி, சண்முகையா, கதிரவன், டேவிட் ராஜன் மற்றும் சக்தி மாரிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்த சுப்பிர மணியன் (26) மற்றும் சங்கரப்பேரியை சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராமன் (35) ஆகிய இருவரை யும் உடனடியாக கைது செய்தனர். மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வர்களை தீவிர விசாரணை மேற்கொண்டு உட னடியாக கைது செய்த சார்பு ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாரை மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் என்.கண்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
திருநெல்வேலி, மே 16- மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் வியாழக்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி வியாழக்கிழமை 16.05.2024 முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 -45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும். மற்றும் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட மீன வர்கள் வியாழக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மே 18இல் கனமழை
ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி, மே 16 தூத்துக்குடி மாவட்டத்து க்கு 18ஆம் தேதி கனமழைக் கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கு மாறு மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்து க்கு 17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை எச்ச ரிக்கையும், 18ஆம் தேதி மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், 19ஆம் தேதி கனமழை எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப் பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட் டத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருள்களை கவனமாக கையாள வேண்டும். மேலும் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக் காயல் வரை தாமிபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதி களுக்கு செல்லவோ வேண்டாம். எனவே பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் ஆகியவற்றின் அருகில் செல்லவேண்டாம் என்றும் ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரி வித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முழுவதும் 283 மி.மீ மழை பொழிவு
திருநெல்வேலி, மே 16- நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவ தும் 283 மில்லிமீட்டர் மழை பொழிவு கடந்த 24 மணி நேரத்தில் பதி வாகியுள்ளது வளிமண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் 19-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவாக 56 மில்லி மீட்டர் கொடு முடி ஆறு அணைப்பகுதியில் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடி யாக ராதாபுரத்தில் 35 மில்லி மீட்டரும், மூலைக்கரைப்பட்டி மற்றும் பாளையங்கோட்டையில் தலா 30 மில்லி மீட்டரும் மழைப்பொழிவு பதி வாகியுள்ளது. மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலையில் 20 மில்லி மீட்டரும், நாலு முக்கு பகுதியில் பதினைந்து மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 10 மில்லி மீட்டரும், காக்காச்சி மலை பகுதியில் ஏழு மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சமவெளி பகுதிகளில் திருநெல்வேலி மாநகரில் 16 மில்லி மீட்டரும் ,களக்காடு பகுதியில் 25 மில்லி மீட்டரும், நாங்கு நேரியில் 3.4 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 2.4 மில்லி மீட்டரும், அம்பாசமுத்திரத்தில் 6.8 மில்லி மீட்டரும் ,சேரன்மகா தேவியில் 5 மில்லி மீட்டரும் மழைப்பொழிவு பதி வாகியுள்ளது. நம்பியாறு அணை பகுதிகளில் 12 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. கண்ணடியன் அணைக்கட்டு பகுதியில் 7.8 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28.3 சென்டிமீட்டர் அதாவது 283 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சராசரி மாவட்ட மழைப்பொழிவு 15 . 7 2 மில்லி மீட்டராக உள்ளது. மாவட்டத்தின் பிரதான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.2 அடியா கவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 62.73 அடியாகவும், மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 85.98 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் கோடை வெயில் குறிப்பிட்ட அளவு குறைந்திருந்த நிலையில், நெல்லை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழ மை நிலவரப்படி குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை பயிர்களுக்கு இந்த கோடை மழை மிகவும் உதவிகரமாக இருக்கும் என நெல்லை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர்.