districts

நிதி நிறுவன மோசடிகளை கையாள ஐஏஎஸ் அதிகாரிகள் - முன்னாள் நீதிபதிகளை நியமித்திடுக!

மதுரை,மார்ச் 3-  நிதி நிறுவன மோசடிகளை  கையாள   ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. முதலீட்டிற்கு 40 சதவீதம் வரை டெபாசிட் வசூலித்தனர். ஆனால், கூறியபடி டெபாசிட் மற்றும் முதிர்வுத்தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதில், நிறுவனத்திற்காக முதலீடு செய்து முடக்கப்பட்டுள்ள தங்களது டெபாசிட் பணமான ரூ. 34.23 லட்சத்தை திருப்பித் தரக்கோரி, மதுரையைச் சேர்ந்த பிரபாகர், சுதாராணி உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.புகழேந்தி முன்பு நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில், ‘‘டான்பிட் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென 2017 இல் உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னும் விசாரணை நடக்கிறது. உயர்நீதிமன்ற  உத்தரவுப்படி, டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி வழங்குவதற்காக கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணம் திரும்ப வழங்கப்படவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அதிக வட்டி தருவதாக கூறி நடைபெறும் மோசடிகளுக்காகவே தனியாக நீதிமன்றமே அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் முதலீட்டு பணம் கூட கிடைக்காமல் ஏமாறுகின்றனர். பணத்தை திருப்பிக்கொடுக்க கண்காணிப்புக் குழு அமைத்தும் ஒரு பைசா கூட இதுவரை யாருக்கும் திரும்ப வழங்கப்படவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவரால் இதுபோன்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாது.

இதுபோன்ற மோசடிகளை தடுத்து நிறுத்த எந்தவித தொழில்நுட்பமும் இல்லை. பல லட்சம் பேர் ஏமாறுகின்றனர். வழக்குப்பதிவு செய்வது மட்டுமே நடவடிக்கையாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை கையாள ஐஏஎஸ் அதிகாரிகள் அல்லது ஓய்வு உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை ஏற்கனவே கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு நீதிமன்ற உத்தரவுகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் டெபாசிட் பணத்தை திருப்பிக்கொடுக்கப்படுவதை கண்காணிப்புக்குழு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.