தஞ்சாவூர், ஜூலை 12- தேங்காய்க்கு கட்டுபடியான விலை வழங்கக் கோரி மாநிலம் தழுவிய அளவில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் கண்டன உரையாற்றினார். தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.சி.பழனிவேலு, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தென்னை விவசாயம் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.அரங்கசாமி, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். போராட்டத்தில், “கட்டுப்பாடு இல்லாமலும், தரமற்ற, தாராள இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும். கொப்பரை கிலோ ஒன்றுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அளித்து ரூ.140 விலை நிர்ணயித்து, அதிக நிதி ஒதுக்கி, ஊழல் இல்லாத கொள்முதலை, ஆண்டுதோறும் செய்ய வேண்டும். உரித்த முழு தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 விலை நிர்ணயம் செய்து, கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து ரேசன் கடைகளிலும் பொதுமக்களுக்கு தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய வேண்டும். சத்துணவு காலை உணவுத் திட்டத்தில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். தென்னையை தோட்டக்கலை துறைக்கு மாற்ற வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து, இயந்திரங்கள் முழு மானியத்துடன் வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழிற்சாலைகளை தஞ்சை மாவட்டத்தில் துவங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டன.