சென்னை,நவ.30- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு வியாழனன்று (நவ.30) சென்று, கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மழை நீர் வெள்ள பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்களிடம் தொலை பேசி மூலம் உரையாற்றிய முதல மைச்சர், அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் முதலமைச்சர் சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். மேலும், தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தேங்கி யுள்ள மழைநீரை துரிதமாக அகற்ற வேண்டும், புதிதாக புயல் உருவாக உள்ளதை யொட்டி பெய்யும் கனமழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சாலை கள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற தேவையான மின் மோட்டார்கள் அமைக்க வேண்டும். மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க வேண்டும், அப்பகுதியின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர் கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.