கிழக்கு கடற்கரை சாலை வழியாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து இசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்குள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தீவிர புயல் நிவர் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் கடலுக்கு தென் கிழக்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்பொழுது இதன் காற்றின் வேகம் 105 கிலோ மீட்டர் முதல் 115 கிலோ மீட்டர் வரை உள்ளது என்றார். மேலும் திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.
காற்றின் வேகத்தை பொறுத்தவரையில் புயல் கரையை கடக்கும் சமயத்தில் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயத்தில் 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல புதுச்சேரியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்குள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன. புதுச்சேரிக்கு ஈசிஆர் சாலையை பயன்படுத்தாமல் திண்டிவனம் சாலையை பயன்படுத்துவது நல்லது என எச்சரித்துள்ளனர்.