அறந்தாங்கி, டிச.30 - புதுக்கோட்டை மாவட்டம் துரையரச புரத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு நூற்பாலை நிர்வாகம் சாய்ராம் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவ னத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணி முடித்த என்எம்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலி தொழி லாளர்களை வஞ்சிக்கும் போக்கை நிறுத்தி கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிர்வாகத்திடம் மனு கொடுக்க செல்லும் தினக்கூலி தொழிலா ளர்களை, ‘சிஐடியு சங்கத்திலிருந்து விலகி னால்தான் மனுவை வாங்குவேன்’ என மிரட்டும் ஆலை மேலாளர், டையம் கிளார்க் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டைல்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எல்.அலாவுதீன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் கர்ணா உள்ளிட்டோர் பேசினர். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா, வாலிபர் சங்கத்தினர், வழக் கறிஞர் சேக்ராவுத்தர் மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.