நாமக்கல், மார்ச் 1- ராசிபுரம் அருகே உள்ள தாண்டான் கவுண்டன்பாளையம் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தாண்டான் கவுண்டன்பாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டமிட்டமிடப்பட்டது. ஏற்பாடுகளை அதிகாரிகளுடன் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்தப்பிறகு, மாவட்ட ஆட்சியர் உமா கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்சி கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவல்துறையினர் என 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.