நாகப்பட்டினம், அக்.9 - அக்கரைப்பேட்டையில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் ஒன்றியம் அக்கரைபேட்டை ஊராட்சி கல்லார் கிராமத்தில் புதிய பாலம் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கட்டப்பட உள்ளது. கடற்கரை கிராமமான அக்கரைப்பேட்டை ஊராட்சியில் மழைக் காலங்களிலும், மாதம் இருமுறை கடல் நீர் பெருகும் காலங்களிலும் கடல்நீர் உட்புகுவதை தடுக்கவும், மழைநீர் பெருக்கெடுத்து கடலுக்கு செல்லவும் இப்பாலம் பயன்படும் வகையில் கட்டப்படுகிறது. கல்லார் கிராமத்தையும் நாகப்பட்டினம் நகரத்தையும் இணைக்கும் இப்பாலமானது, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலியின் தொடர் முயற்சியால் இப்பாலம் அமையப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் மற்றும் கல்லார் கிராம பஞ்சாயத்தார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.