திருவாரூர், பிப்.16 - திருவாரூர் நகராட்சி 7 ஆவது வார்டில் (பழைய எண் - 4) திமுக வேட்பாளராக ஜி.வரதராஜன் (49) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறார். இடதுசாரி சிந்தனையாளரும், சமூக ஆர்வலருமான ஜி.வரதராஜன் தனது இளம் வயது முதலே பொது வாழ்விலும், சமூக பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 2011 - 2016 ஆண்டுகளில் இவர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தபோது தான் துர்க்காலயா ரோடு வழியாக நல்லப்பா நகர் செல்லும் பொதுப்பாதை தனி நபரால் சுவர் எழுப்பப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சனை குறித்து தீக்கதிர் நாளிதழில் “ஆதிக்க சுவர் அகற்றப்படுமா” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த கட்டுரை வெளியான அன்று மதியம் 1 மணியளவில் அன்றைய தமிழக அரசின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன், நகராட்சி ஊழியர்களை வைத்து சுவரை உடைத்து அப்புறப்படுத்தி பொதுப்பாதையை திறந்து விட்டார். இதனை அப்பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்பகுதி முழுவதும் தீக்கதிர் விநியோகம் செய்யப்பட்டது.
ஜி.வரதராஜன் திருவாரூர் நகரத்தின் அனைத்து சேவை சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், குறிப்பாக சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு உள்ளவராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். மக்கள் நலன் சார்ந்த எத்தகைய போராட்டமாக இருந்தாலும் போராட்ட களத்தில் கண்டிப்பாக இவர் இருப்பார். 23 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் தன்னை இணைத்துக்கொண்டு மக்களுக்கு ஏராளமான் நற்பணிகளை செய்து வருகிறார். இம்முறை மீண்டும் வெற்றி பெற்று இப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்கள் சுமார் 100 குடும்பங்களுக்கு மனைப்பட்டா பெற்று தருவது தனது முதல் கடமை என கூறியதுடன், அரசின் அனைத்து திட்டங்களையும் இப்பகுதி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் தனது தலையான கடமை என கூறி வாக்கு சேகரித்து வருகிறார். சுயேட்சை வேட்பாளராக பெரும் வெற்றியை ஈட்டிய இவர் தற்போது திமுக வேட்பாளராக போட்டியிடுவதால் திருவாரூர் நகராட்சியில் வெற்றிபெரும் வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால் சாதனை வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஜி.வரதராஜன்.