திருவள்ளூர், செப் 12- அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தோழர் சீனி வாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று வாழவந்தான் கோட்டையை சுற்றி எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றுவோம் என மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ் அரசு தெரிவித்துள்ளார். ஊத்துக்கோட்டையை அடுத்த கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 75 கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பை சுற்றிலும் தனியார் மனைப்பிரிவை சேர்ந்த நபர் சுற்று சுவரை எழுப்பியுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். செப்டம்பர் 6 அன்று சுவரை அகற்றப் படும் என வட்டாட்சியர் உறுதியளித்து இருந்தார். எனினும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் அலு வலகம் அருகில் திங்களன்று (செப். 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இனியும் காலம் தாழ்த்துவதை ஏற்க மாட் டோம். அடுத்த கட்டமாக தோழர் சீனிவாசராவ் நினைவு நாளான செப்டம் பர் 30 அன்று தீண்டாமை சுவரை அகற்றுவோம்” என்றார். பின்னர் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர், செப்டம்பர் 15 அன்று தீண்டாமை சுவர் அகற்றப் படும் என வட்டாட்சியர் அருண்குமார் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் இ. எழிலரசன், மாவட்டச் செய லாளர் த.கன்னியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, ஒன்றியச் செயலாளர் கே.முருகன், மாவட்டக் குழு உறுப் பினர்கள் என்.கங்காதரன், சுதாகர், சிஐடியு நிர்வாகி முரளி, மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா, விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண் டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.