திருவள்ளூர், ஜூன் 23- தச்சூர் முதல் சித்தூர் வரை அமைக்கப்படும் ஆறு வழி சாலை மற்றும் மகாபலிபுரம் சென்னை எல்லை சாலை திட்டத்தின் கட்டுமானப்பணிகளின் போது வழக்கமாக மக்கள் பயன்படுத்தி வரும் சாலைகளை அடைக்கக்கூடாது என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் அதானி துறைமுக விரிவாக்கத்திற்காக எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரையும் தச்சூர் முதல் சித்தூர் வரையும் இரண்டு விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை எல்லைச் சாலைத் திட்டம் எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி தச்சூர் கன்னிகைபேர், புன்னப்பாக்கம், கரிக்கலவாக்கம், திருவள்ளூர், திருபெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில் வழியாக மாமல்லபுரத்தில் முடிகிறது. இந்த புதிய சாலைத் திட்டம் 132.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 பிரிவுகளாக செயல்படுத்த திட்டமிட்டு, சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் இந்த சாலை திட்டப் பணியை செயல்படுத்துகிறது. அதே போன்று தச்சூர் கூட்டுச்சாலை முதல் சித்தூர் வரை (தமிழ்நாடு 44 கி.மீ. தூரம், ஆந்திரா 82 கி.மீ. தூரம் ) 126 கி.மீ தூரத்தில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று வட்டங்கள் வழியாக( NH716) வரையிலான வெளி வட்டச் சாலையும் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த இரண்டு சாலைகள் அமைப்பதற்காக வருவாய்த்துறை மூலம் விவசாயிகளிடமிருந்து விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உயர்மட்ட சாலைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும் போது, கிராம மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள மாநில அரசின் சாலைகள் (SH),மாவட்ட சாலைகள் (MDR ), இதர மாவட்ட சாலைகள் (ODR), ஒன்றிய சாலைகள் குறுக்கிடுகின்றன.வெளிவட்ட சாலைகள் அமைக்கும் போது, பல இடங்களில மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள சாலையை பயன்படுத்த முடியாமல் வெளி வட்ட சாலைகளுக்காக தற்போது பயன்படுத்தி வரும் சாலைகள் அடைக்கப்படுகிறது. இதனால் மக்கள் பல இடங்களில் 5 முதல் 10 கி.மீ தூரம் வரை சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக திருவள்ளூர் அருகில் மூலக்கரையிலிருந்து மெய்யூர் வழியாக செல்லும் சாலை அடைக்கப்படுகிறது. இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் பயன்படுத்தும் சாலை அடைக்கப்படுவதால் அனைத்துப் பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் வெள்ளியூர், கரிகலவாக்கம் போன்ற பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறை உள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான் சென்னை எல்லை சாலை திட்டம் செல்கிறது . ஆனால் அங்கே மேம்பாலம் அமைப்பதற்கான ஏற்பாடு இருப்பதாக தெரியவில்லை. அந்த சாலையை அடைத்தால் மாற்று வழிக்கான ஏற்பாடு என்ன என்பதும் தெளிவுபடுத்தவில்லை. அதேபோல் கன்னிகைப்பேரிலிருந்து புன்னப்பாக்கம் வழியாக செல்லும் சாலையில் அத்தங்கி காவனூர் பகுதியில் சாலை அடைக்கப்படுகிறது. இந்த சாலை வெங்கல் முதல் கன்னிகைபேர் வழியாக செல்லும் சாலையாகும். இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கிறது. 10 ஊராட்சிகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த சாலை அடைப்பதால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
அதேபோல் பொன்னேரி வட்டத்தில் சிறுவாக்கம், ஆமூர், நெடுவரம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் கிராம சாலைகள் அடைக்கப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு செல்லும் சிறு, சிறு சாலைகளும் அடைக்கப்படுகிறது. சென்னை எல்லை சாலை திட்டம் சாலை கட்டமைப்பில் பிரதான வாகனப்பதை , சர்வீஸ் ரோடு, நடைபாதை, சென்ட்ரல் மீடியன் உள்ளிட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை அமைக்கும் பணியில் சர்வீஸ் ரோடு, நடைபாதை இருப்பதாக தெரியவில்லை.
தச்சூர் முதல் சித்தூர் ஆறு வழி சாலை திட்டத்தில், ஆந்திர எல்லைக்குள் அமைக்கப்படும் 82 கிலோமீட்டர் சாலையில், பிரதான சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை, பிரதான சாலையில் ஏறுவதற்கும், இறங்கு வதற்குமான வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக எல்லைக்குள் பள்ளிப்பட்டு ஊத்துக்கோட்டை பொன்னேரி வரை சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. சாலையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பப்படுகிறது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எம்.பி,எம்எல்ஏ-க்களுக்கு மனு
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆகியோரை சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் ஆகியோர் நேரில் சென்று மனு அளித்தனர்.
மக்கள் பிரதிநிதிகளும் மனுக்களை பெற்றுக் கொண்டு மக்கள் பயன்படுத்தும் சாலையை அடைக்கப்படாமல், சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்துவோம் என்றனர்.
-பெ.ரூபன்