திருவண்ணாமலை, ஜூன் 11- திருவண்ணாலை மாவட்டம், வந்தவாசி வட்டம், அருங்குணம் கிராமத்தில் பஞ்சமி நிலம் சுமார் 100 ஏக்கர் உள்ளது. இதில் சுமார் 80 ஏக்கர் நிலத்தை மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து, வருவாய் ஆவணங்களில் மோசடியான முறையில் பெயரை கூட்டாக சேர்த்து உள்ளனர். இந்த சட்டவிரோத பட்டா பெயர் மாறுதல் களை ரத்து செய்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆதிதிராவிடர் மக்க ளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மனு கொடுத்து வருகின்றனர். ஆனாலும், வருவாய்த்துறையினர் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூன் 11) வந்தவாசியில் நடைபெற்ற ஜாமபந்தியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் செ.மோகன், வழக்கறிஞர் சுகுமார், முரளி, குமார் ஆகியோர் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அணிந்துச் சென்று மனு கொடுத்தனர்.