திருப்பூர், டிச.18- திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு சட்டப்படி உரிய விதிமுறைகள் உடனடியாக அமலாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் அரசியல் அமைப்பு சட்டப்படி குழந்தைகள் பாதுகாப்பாகவும், கண்ணிய மாகவும், சுதந்திரமாகவும் கல்வி கற்கும் உரிமை பெற்றவர்களாக உள்ளனர். அதற்கேற்ப கல்வி சார்ந்த அனைவரும் செயல்பட வேண்டும். குறிப்பாக, அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்க வேண்டும். மாநில அளவில் மத்திய புகார் மையம் அமைக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை குழுவில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் இருவர், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் இருவர், பள்ளி நிர்வாக தரப்பில் ஒருவர், பொது நல அமைப்பு சார்ந்த ஒருவர் இடம் பெற வேண்டும் என வழிகாட்டுதல் உள்ளது. அதேபோல் விசாகா குழு பரிந்துரைகளை அமலாக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடைமுறைகளை திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்துவது பற்றி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி சார்ந்த அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டப்படி, தனியான குழு அமைத்து அவர்கள் பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பாலியல் குற்றத் தடுப்பு களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றுவது பற்றி கண்காணிக்க வேண்டும். எனவே திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் சட்ட விதிமுறைகளின்படி மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உறுதி செய்வதுடன், கண்காணித்து தேவையான நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.