திருப்பத்தூர், ஜன. 25- திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது. திருப்பத்தூர் நகரம் 36-வது வார்டுக்குட்பட்ட டிஎம்சி காலனியில் 100க்கும் மேற்பட்ட தூய்மைபணியாளர்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருந்ததியினத்தை சேர்ந்தவர்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாற்றி வருகின்றனர். 30 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் நகரை சுத்தம் செய்வது, கால்வாய் கழிவுகளை அகற்றுவது, குப்பை அள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் வசிக்கும் டிஎம்சி காலனியை அழகுப்படுத்தி நீச்சல் குளம், பூங்கா அமைக்க போவதாகவும் இதற்காக, தூய்மைத் தொழிலாளர்கள் தங்களது வீடுகளை மாற்றம் செய்துக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டு முறை நோட்டீஸ் வழங்கியது. மிக மிக சொற்ப தொகையை பெற்றுக்கொண்டு, ஒரு நகராட்சியை தினமும் முழுமையாக தூய்மை செய்து வரும் தூய்மைத் தொழிலாளர்களை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படும் அதிகாரிகளை கண்டித்து கடந்த டிசம்பர் 15 அன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது. இதனையடுத்து, நடந்த பேச்சில் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இடத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.காத்தவராயன், மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். திருப்பத்தூர் நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குனிச்சி என்கிற ஊராட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. நகரின் தூய்மை பணிக்கு தினசரி காலை 5 மணிக்கு பணிக்கு வரவேண்டிய ஆண், பெண் தொழிலாளர்களுக்கு நகருக்கு வெளியில் பல கிலோ மீட்டரில் இடம் ஒதுக்குவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும், பொருளாதாரமும் பாதிக்கும், அந்த தொழிலாளிகளின் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு சமூகத்தின் அடிநிலையில் இருக்கும் இந்த தொழிலாளர்களுக்கு டிஎம்சி காலனியில் வேறு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார். இச்சந்திப்பின் போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் எம்.காசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் வட்டச் செயலாளர் எம்.காசி, ஜி.கேசவன், எ.ரவி, துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சரவணன், டி .சின்னண்ணன், முருகேசன் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.