திருவாரூர் நகரத்தில் 20 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்
திருவாரூர், ஜூலை 10 - திருவாரூர் நகரத்தில் அழகிரி காலனி, சீராத்தோப்பு, நெய்விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதற்கான கிளை அமைப்புக் கூட்டம் கட்சியின் நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம் தலைமையில் நடை பெற்றது. புதிதாக இணைந்தவர்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் வரவேற்றுப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகரக்குழு உறுப்பினர் சந்தோஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எம்.முத்தையன் தலைமையில் புதிய உறுப்பி னர்களைக் கொண்ட கிளை அமைக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி நிலுவையை வழங்க ஓய்வூதியர் வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஜூலை 10- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாதாந்திரக் கூட்டம், வட்டத் தலைவர் கண. கல்யாணம் தலைமையில், பட்டுக்கோட்டை மெரினா அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.கலியமூர்த்தி சிறப்பு ரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்ட இணைச் செயலாளர் ரெ.ஞான சூரியன் நன்றி கூறினார். முன்னதாக, மறைந்த ஓய்வூதியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஜூலை மாதம் பிறந்த 47 உறுப்பினர்களுக்கு முன்னாள் கூட்டுறவு துணைப் பதிவா ளர் சிவ.சுந்தர்லால் தலைமையில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. திருக்காட்டுப்பள்ளி மாவட்ட மாநாட்டில், வட்டக்கிளை சார்பில் திரளானோர் கலந்து கொள்வது, தேர்தல் நேரத்தில் திமுக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். அக விலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர், ஜூலை 10- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருவிக்கரம்பை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குருவிக்கரம்பை ஊராட்சி, லயன்ஸ் சங்கம், குருவிக் கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு பேரணிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் வி.எம்.தமிழ்செல்வன், லயன்ஸ் சங்கத் தலை வர் செ.இராமநாதன், பொருளாளர் பன்னீர்செல்வம், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் வி.மனோகரன், உடற்கல்வி இயக்குநர், மாணவ, மாணவிகள், ஊராட்சி மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்ட னர். பேரணி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, மடத்துவாசல் மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மார்க்கெட்டில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துணியினாலான மஞ்சப்பை வழங்கப்பட்டது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறலாம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 - திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், படித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600, ரூ.750, ரூ.1000 வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படு கிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாம லும், இதர பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள தங்கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் துக்கு வந்து இலவசமாக விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிட்பண்ட்ஸ் தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 - திருச்சி மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சனிக்கிழமை திருச்சி பிரஸ் கிளப்பில் நடந்தது. சங்க ஆலோசகர் தங்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கடந்த 100 ஆண்டுகளாக சிட்பண்ட் தொழில் செய்து வருகிறோம். சிட்பண்ட் சேவை மீதான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கிகள், வங்கி சாரா கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் குறுநிதி நிறுவனங்கள் பெறும் வட்டித் தொகைக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சிட்பண்ட்ஸ்களுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு கேட்டு கொண்டிருக்கும் வேளையில், யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக 12 சதவிகித ஜிஎஸ்டியை 18 சதவீதமாக உயர்த்தி உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் சிட்பண்ட் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வருவாய் குறையும். தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு மாதத்திற்கு ரூ.2000 கோடி வருமானம் கிடைக்கிறது. ஜிஎஸ்டி வரி உயர்வால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் எங்களுக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே அரசு சிட்பண்ட் நிறுவனங்களின் சேவைக்கு வரி விதிப்பதில் உள்ள முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.