முத்துப்பேட்டை, பிப்.24- திருவாரூர், கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் புதிய கட்டடங்கள் சென்ற டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முதலவரால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டன. இந்த திறப்பு விழாக்கள் அந்தந்த ஒன்றிய பெருந்தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன் திறப்பு விழா கல்வெட்டுகளில் திருவாரூர், கோட்டூர், நீடாமங்கலம் அவ்வாறே பொறிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு கட்டடங்களில் பதியப்பட்டது. ஆனால் முத்துப்பேட்டையில் மட்டும் அவ்வாறு நடைபெறவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி கூறும் போது, முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கனி அமுதா ரவி, ஒரு தலித் பெண் தலைவர் என்பதால் சாதிய சிந்தனை காரணமாகவும், முத்துப்பேட்டை வட்டாரத்தில் உள்ள சில ஆதிக்க நபர்களால் உருவாக்கப்பட்ட நிர்பந்தம் காரணமாகவும், முத்துப்பேட்டை ஒன்றிய புதிய கட்டடத்தின் திறப்பு விழா கல்வெட்டில் ஒன்றிய பெருந்தலைவர் தலைவர் கனி அமுதா ரவியின் பெயருக்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் இருவர்களின் பெயர்களையும், வரவேற்பு என்ற இடத்தில் துவக்கத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பெயரும், இறுதியில் நன்றி என்பதில் மட்டும் ஒன்றியப் பெருந்தலைவர் கனி அமுதா ரவியின் பெயரும் பொறிக்கத் திட்டமிடப்பட்டது. இது தவறு, பின்னர் பிரச்சனைகள் உருவாகும் என்று வட்டார வளர்ச்சி அலுவலக வட்டாரத்தில் சுட்டிக் காட்டப்பட்ட சூழ்நிலையில், குறுகிய காலத்திலேயே, இரண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மற்ற மூன்று புதிய கட்டடங்களிலும், முறைப்படி கல்வெட்டு பதிக்கப்பட்ட நிலையில், முத்துப்பேட்டையில் மட்டும் அவ்வாறு கல்வெட்டு பதிக்கப்படாமல் இருந்ததால், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாகவே, கல்வெட்டு பதிக்கும் போராட்டத்திற்கு செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 24.2.2025 அன்று மாநிலப் பொதுச் செயலாளர் கே சாமுவேல் ராஜ், மாநிலச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, சிபிஎம் மாநில உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகியோரை அழைத்து, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் இருந்து, சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. நான் (தமிழ்மணி), மாநிலச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் சி. செல்லதுரை, ஒன்றியச் செயலாளர் கே. பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.என். காளிமுத்து, என். ராஜேந்திரன், ஆர். வீரமணி மற்றும் அரசு தரப்பில் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலெட்சுமி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். முடிவில், கோட்டூர் ஒன்றிய புதிய கட்டட பெயர்ப் பலகையில் பதிக்கப்பட்டது போல், முத்துப்பேட்டையிலும் விழா தலைமை என்ற இடத்தில் ஒன்றிய பெருந்தலைவர் கனி அமுதா ரவியின் பெயர் பொறிக்கப்பட்ட பலகையை பதிப்பது என நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அவ்வாறே எழுத்துப்பூர்வமான உடன்பாடும் எட்டப்பட்டது. இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.