districts

img

மயிலாடுதுறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: பட்டியல் எழுத்தர்கள் போராட்டம்

மயிலாடுதுறை, பிப்.21-  மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிப கழக துணை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 179 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது அறுவடை நிறைவு பெற்று வரும் நிலையில், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.  75 ஆயிரம் மெ.டன் நெல் தேக்கம் மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் லாரிகள் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.  பருவம் தப்பி பெய்துவரும் மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைகின்றன. சேதமடையும் நெல் மூட்டைகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அபராத தொகை கட்ட வேண்டியுள்ளதாகவும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தாங்கள் பழிவாங்கப் படுவதாக தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நுகர்பொருள் வாணிப கழக, துணை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் தண்டனைத் தொகை கட்ட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலைய பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.  மயங்கி விழுந்தார் இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் ஆனந்தராஜ் என்ற நபர், போராட்டத்தில் மயங்கி விழுந்தார். அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.