ஆட்சியர் தகவல் திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி, தற்கால தலைமுறையினருக்கு கலைப் பயிற்சி வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைப் பயிற்சி மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, கலை பண்பாட்டு வளாகம், எண்:32, மூலத்தோப்பு, மேலூர் ரோடு, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி - 620006 என்ற முகவரியில், ஜூலை 12 பயிற்சிகள் துவங்க உள்ளன. இப்பயிற்சி வகுப்புகளில் நாடகம், கரகாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம் முதலிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் சேரலாம். கலை ஆர்வமுடையவர்கள் மட்டுமல்லாமல் கலைஞர்களும் அரசின் சான்றிதழ் பெறும் வகையில் இவ்வகுப்பில் சேரலாம். ஓர் ஆண்டு பயிற்சிக்குப் பின் அரசுத் தேர்வு நடத்தப்பட்டு, பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. எட்டாம் வகுப்புக்கு குறைவான கல்வித்தகுதி உடையவர்களும் சேரலாம். ஆனால் தேர்வுக்கு செல்ல இயலாது. இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி வகுப்புகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.500 மட்டும் செலுத்த வேண்டும். நாட்டுப்புற கலைப் பயிற்சிகளில் கலை ஆர்வம் மிக்கவர்கள் சேருவதற்கு, இப்பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் எண்.8870009591 மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளி அலுவலக தொலைபேசி எண். 0431-2962942 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.