districts

img

போஸ்நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப்.21-  புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், போஸ்நகர் பகுதிக்கு தனியாக மேல்நிலை நீர்த்தேகத் தொட்டி அமைத்து, வாரம் இரண்டு முறை குடிநீர் வழங்க வேண்டும். விபத்தைத் தடுக்கும் வகையில் மணிபள்ளம் சாலையில் வேத்தடை அமைக்க வேண்டும். சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் போஸ்நகரில் இருந்து மணிப்பள்ளம் செல்லும் சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். கூட்டுறவு அங்காடியில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு வகையான புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். மின் மயான புகைபோக்கியில் அதிகமாக புகை வெளியேறுவதைத் தடுக்க, புதிய புகைபோக்கி அமைக்க வேண்டும். போஸ் நகர் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் புதைச்சாக்கடைத் திட்டம், காவிரி குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை போஸ் நகர் சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் போஸ்நகர் கிளைச் செயலாளர் வ.சிவராஜன் தலைமை வகித்தார். மா.கோவிந்தராஜன், வி.ஜமீன், ச.ஹக்கீம், மு.அப்பாஸ், ஜெ.ஜெயக்குமார், சு.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், கி.ஜெயபாலன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்  டி.காயத்ரி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னிணி மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஏ.ரகுமான், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர்கள் சி.அடைக்கலசாமி, ஆர்.சோலையப்பன், பழ.குமரேசன், மருத்துவர் கார்த்திக், ச.ஹக்கீம், வாலிபர் சங்க நகரச் செயலாளர் தீபக் உள்ளிட்டோர் பேசினர்.