districts

சம்பா பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர், செப்.22- புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரிலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம், அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  நிகழாண்டில் ரபி சிறப்பு பருவத்தில் நெல்  (சம்பா) பயிருக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ரபி இதர பருவப் பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்கள் குறுவட்டங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் தங்களுடைய கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

 விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (1432 ஆம் பசலி), வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க அச்சு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.  காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கிக் கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து, காப்பீடு செய்த பின்னர், அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.  விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்யும் பயிரின் பெயர், கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள், வங்கிக் கணக்கு எண்கள் ஆகியவை தவறுதலாக பதிவு செய்திருப்பின் காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்தில் சரி செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஏதேனும் தவறு இருப்பின் அதை ஏற்க இயலாது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;