தஞ்சாவூர், ஏப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், செருவாவிடுதி கிராமத்தில் அமைந்தி ருக்கும், ஸ்ரீ அய்யனார் சுவாமி, ஸ்ரீ போத்தி அம்பாள் சுவாமி, ஸ்ரீ மாரியம்மன் சுவாமி ஆகிய கிராம பொது கோயில்களில் கடந்த 18 ஆண்டுகளாக சாதி வெறியர்களால் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மறுக்கப்படும் சித்ரா பௌர்ணமி திருவிழா உரிமையை கேட்டு, செருவாவிடுதி தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் சார்பில், செருவாவிடுதி தெற்கு போத்தி அம்பாள் கோயில் நுழைவாயில் அருகே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மூன்று கோயில்களிலும் சித்ரா பௌர் ணமி அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட வும், திருவிழா நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும். செருவாவிடுதியில் வாழும் அனைத்து சாதியினரும் வழிபடவும் அனுமதி வழங்க வேண்டும். மூன்று கோயில்களையும் இந்து அறநிலையத்துறை புதுப்பித்து அரசே ஏற்று நடத்த வேண்டும். 18 ஆண்டுகளுக்கு மேலாக சாதிய பாகுபாடு காட்டி, அடித்தட்டு மக்களை திருவிழா நடத்தவிடாமல் தடுக்கும் சாதி வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒன்றிரண்டு குடும்பத்தினரே உள்ள குறிப்பிட்ட சில சாதியினருக்கு, இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், 600 குடும்பத்திற்கு மேல் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருவிழா நடத்த அனுமதி மறுப்பதாக கூறி போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர்களுடன் பட்டுக் கோட்டை டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சங்கரன் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோட் டாட்சியர் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறி, பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.