இளம்பிள்ளை. டிசம்பர் 21- இளம்பிள்ளை அருகே தனியார் பள்ளியில் போலி சான்றிதழ் வழங்கி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் இயங்கி வரும் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆங்கில வழி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளியின் முத்திரை இல்லாமல் மேற்படிப்புக்கு செல்லத்தகாத வகையில் போலி சான்றிதழ் வழங்கி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், கொரோனா காலகட்டத்தில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களில் இருந்து குறைத்து வசூல் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
ஆனால் இப்பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வது மட்டுமில்லாமல் கொரோனா பெரும் தொற்று காலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களிடம் சுமார் 80 ஆயிரம் வரை பணம் வசூல் செய்துள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் சில பெற்றோர்கள் தமிழக முதல்வர், கல்வி அமைச்சர், மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரிகள் என பலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.