districts

img

ஆம்பூர் சர்க்கரை ஆலையை திறப்பாரா முதல்வர்?

மாநிலத்தில் 800 மெட்ரிக் டன் கரும்பு அரைக்கும் திறன்கொண்ட மூன்றாது சர்க்கரை ஆலையாக கொடிக்கட்டி பறந்து வந்தது ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இப்ப எப்போது திறக்கப்படும்? அரவை துவங்குமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் தொழிலாளர்களும், விவசாயிகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 1961 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் வடாற்காடு மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரில் துவங்கப்பட்டது. அன்றைக்கு தேவிகாபுரம், ஆரணி, சேவூர், கண்ணமங்கலம், செய்யாறு, பள்ளிக்கொண்டா, கே.வி. குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய பிர்காகளில் இருந்து இந்த ஆலைக்கு கரும்பு கொள்முதல் செய்யப் பட்டது.  பிறகு, 1974 ஆம் ஆண்டில் இந்த ஆலையின் திறன் 2200 மெ. டன்னாக உயர்த்தப்பட்டது.  சுமார் 2000 தொழிலாளர்கள் நிரந்தரமாகவும் 500 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வந்தனர். தனியார்மயமும்-திறன் குறைப்பும் 1989-90 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தனியார் மயக் கொள்கையால் தரணி சர்க்கரை ஆலைக்கு பல பிர்கா ஒதுக்கப்பட்டு ஆலையின் திறன் குறைக்கப்பட்டது.

அதன்பிறகு, ஆம்பூர், பள்ளிக்கொண்டா, குடியாத்தம், ஆரணி, செய்யாறு, சேவூர் ஆகிய பிர்கா மட்டுமே ஆம்பூர் ஆலையுடன் இணைக்கப்பட்டது. திறன் உயர்த்தப்பட்டது போது 1994 - 95 ஆம் ஆண்டில் அதிகப்படியாக 361 நாட்கள் வரை அரவை நடந்தது. அந்த காலத்தில் தான், சிஐடியு சங்க முயற்சியால் 50 கிலோ வரைதான் ஒருவர் தூக்க முடியும் என போராடி உத்தரவை பெற்றது. தமிழக சர்க்கரை ஆலை வரலாற்றில் இங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை முதன் முதலில் சன் பிராண்ட் , ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்று ஏற்றுமதி செய்யப்பட்டது. 1990 க்கு பின் சுமார் 14 ஆண்டுகள் 1400 மெட்ரிக் டன் சக்திக்கு மீறி அரவை நடந்துள்ளது. கரும்பு அபிவிருத்திக்காக 17 பாலங்களை கட்டிக்கொடுத்துள் ளதுடன் புதிய சாலைகளையும் அமைத்துக் கொடுத்துள்ளது ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம். இதுமட்டுமின்றி இந்த ஆம்பூர் கூட்டுறவு ஆலை தொழிலாளர்களுக்காக தபால் அலுவலகம், மேல் நிலை பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, கூட்டுறவு வங்கி என சகல வசதிகளும் இருந்தன. தற்சமயம், 60 ஏக்கர் பரப்பளவில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகம் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் படி 516 தொழிலாளிகள் பணியாற்ற வேண்டிய இந்த ஆலையில் 100 தொழிலாளிகள் மட்டுமே உள்ளனர். காலிப் பணியிடங்கள் நிரப்பவில்லை. ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை. வறுமையிலும்... வழக்கமாக கொடுக்கப்படும் யூனிபார்ம், ஷூ, உட்பட மூன்றூண்டுகளாக கொடுக்கப்படவில்லை என்றாலும் ஆலை இயக்கினால் போதும் என தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆலையை திறப்பதற்கு தேவையான ஆய்த்த பணிகளை தொழிலாளர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆலையை திறக்கக்கோரி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சர்க்கரை துறை ஆணையர் என்று அனைத்து கதவையும் தட்டியும் விடிவில்லாமல் உள்ளது. இந்த ஆலைக்கு மேலாண்மை இயக்குநர் இல்லை என்பதால் பொறுப்பு இயக்குநர் தான் உள்ளார். அவரும் இந்த ஆலை இயக்கினால் போதும் என்கிறார். அதற்கு ஏற்றார் போல் கரும்பு பதிவு இல்லை என்றும் பல கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே ஆம்பூர் ஆலை இயக்க முடியும் என்றெல்லாம் கூறி வருகிறார்.  திமுக வாக்குறுதி... இது குறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமிநாதன் கூறுகையில்,“ ஆம்பூர் ஆலையை திறக்கும் வரைக்கும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பங்கேற்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அருள்சீனிவாசன் கூறுகையில், “ திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தொழிலாளர்கள், விவசாயிகளின் ஏக்கத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

;