districts

img

அரசுப் பள்ளியில் வடியாத மழைநீர்

மதுராந்தகம், டிச. 2- புதூர் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் என பள்ளி மாணவர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் வட்டம் புதூர் ஊராட்சியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்  செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக பள்ளி வளாகத்திற்குள் வெள்ள நீர் சுமார் இரண்டு அடிக்கு மேலாகத் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் தண்ணீரில் இறங்கி வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், கழிவறைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது இதனால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தனர். தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது பள்ளி வளாகத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால்வாயை ஒரு சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே தேங்கிய நீரையும் ஆக்கிரமிப்புகளும் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.