districts

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கிசான் பணம் பெற ஆதார் அவசியம்

விழுப்புரம்,பிப்.28- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வேளாண் இடுபொருள்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ், 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 10 தவணை தொகைகள் வரப்பெற்றுள்ளன. தற்போது விவசாயிகள் 11-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், தங்கள் விவரங்களை பி.எம். கிசான் திட்ட வலைதளத்தில் சரிபார்ப்பு செய்யலாம். ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ - சேவை மையங்களின் மூலம் பி.எம். கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து விவரங்களை சரிபார்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ.15-ஐ இ - சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய இரண்டு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதார் விவரங்களை மார்ச் 5-ஆம் தேதிக்குள் பி.எம். கிசான் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கான 11-ஆவது தவணைத் தொகை விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வு தேர்வு

திருப்பூர், பிப்.28- கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்கான கல்வி  உதவித்தொக்கான திறனாய்வு தேர்வு நடை பெற்றது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்ப தற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாண விகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4  ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9  ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த தேர்வு  எழுத தகுதி உடையவர்கள். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண் டும். அதனடிப்படையில் விண்ணப்பித்த மாணவ, மாணவிக ளுக்கு ஞாயிறன்று தேர்வு நடைபெற்றது. திருப்பூர் ஜெய்வா பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டி ருந்த தேர்வு மையத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து  நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதி னர். 


உப்பாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தாராபுரம், பிப்.28- தாராபுரம் அருகே உள்ள உப்பாறு  அணையில் இருந்து பாசனத்திற்காக தமிழக அமைச்சர்கள் ஞாயிறன்று தண்ணீரை திறந்து வைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் இருந்து பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி உப்பாறு அணையிலிருந்து வலது மற்றும் இடதுகரை கால்வாய்களிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டனர். இதன்மூலம் 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் 6060 ஏக்கர் நிலங்கள் பசன வசதி பெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.   


போலியோ சொட்டு மருந்து முகாம்

திருப்பூர், பிப்.28- திருப்பூர் மாவட்டத்தில் 1127 மையங்கள் மற்றும் 27 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 1154 இடங்களில் ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 21  ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இம்முகாமில் 4  ஆயிரத்து 666 பணியாளா்கள் சொட்டு  மருந்து வழங்கும் பணியை மேற்கொண்டனர்.  இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி யில் ஆணையர் கிராந்திக்குமார் பாடி, சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.