சென்னை, செப். 21 - தாம்பரம் ராஜீவ்காந்தி நகர் மக்களுக்கு குடி மனைப் பட்டா வழங்குவது தொடர்பாக புதனன்று (செப்.21) குடியிருப்பு பகுதியை வட்டாட்சியர் ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சி, புலிக்கொரடு கிராமம், ராஜீவ்காந்தி நகரில் (சர்வே எண்.113) நான்கு தலை முறைகளாக 102 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த இவர்களுக்கு 2006ம் ஆண்டு முதல் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. குறிப்பாக, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, 2006ம் ஆண்டு முதல் வருவாய்த் துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வந்தார். மக்கள் வசித்து வரும் 2.33 ஏக்கர் வன நிலத்திற்கு ஈடாக, வருவாய்த்துறை இரு மடங்கு நிலத்தை கொடுத் தால், குடிமனைப்பட்டா வழங்க நிலத்தை தருவதாக தமிழ்நாடு காப்புக்காடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கூறி னார். இதுகுறித்து காஞ்சி புரம் ஆட்சியரிடம் சிபி எம் தலைவர்கள் முறை யிட்டனர். இதனையடுத்து செங்கல்பட்டு, வேத நாராயண புரம் கிராமம், தேவர்மலைப் பகுதியில் 4.66 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை 2015ஆம் ஆண்டு வனத்துறைக்கு வரு வாய்த்துறை வகை மாற்றம் செய்து கொடுத்தது. அதன்பிறகும், வனத்துறை நிலத்தை வரு வாய்த் துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளது. இதுதொடர்பாக வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச் சந்திரன் ஆகியோரை சிபி எம் தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். மார்க் சிஸ்ட் கட்சியின் கோரிக் கையை ஏற்று, தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜாவும் ஆட்சிய ருக்கு கடிதம் எழுதி யிருந்தார். இந்நிலையில், தாம்பரம் வட்டாட்சியர் கவிதா, ராஜீவ் காந்தி நகரில் ஆய்வு செய்தார். அப்போது கட்சி யின் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, நிர்வாகிகள் ராஜன் மணி, கோவிந்தன், பாஸ்கர், சண்முகம், வசந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.