சென்னை,டிச.8- சென்னை மணலியில் உள்ள ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை (58). மணலி சிபிசிஎல் ஒன்றிய அரசு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திங்களன்று 20 அடி உயரத்தில் எந்திரங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார். இது சம்பந்தமான சட்ட ஒழுங்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அய்யாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒப்பந்ததாரர் முரளி, மேற்பார்வையாளர் ஜார்ஜ், பாதுகாப்பு அதிகாரி என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த அய்யாதுரையின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு தொகை வழங்க கோரி அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிச் செயலாளர் பாபு, தேவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் புதனன்று சிபிஎஸ்எல் நிறுவனத்தின் முன்பு நிவாரணம் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணலி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த முதலாளி முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு 9.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். உத்தரவாதத்தின் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.