சென்னை, செப்.20- சென்னையில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காய்ச்சல் பாதித்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1918-ல் உலக போர் சமயத்தில் இனபுளூயன்சா பரவி ஏராளமான உயிர்களையும் பலி வாங்கி இருக்கிறது. அதன்பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. நோயின் வீரியம் குறைந்து உலகம் முழுக்க பரவியது. இனி அழிக்கவே முடியாது. அதே சமயம் பெரிய அளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்ற நிலையில் இன்புளூயன்சா உருமாற்றம் அடைந்தது. உலகம் முழுக்க சீசனுக்கு சீசன் பரவும் காய்ச்சலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டில் முடங்கி கிடந்ததால் இதன் தாக்கம் தெரியவில்லை. இந்த நோயின் அறிகுறி சளி, தொண்டை வலி, உடல்வலி, இருமல், தலைவலி ஆகியவைதான். விட்டு விட்டு காய்ச்சல் வரும். 3 நாட்களுக்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் சுயமாக மருந்து வாங்கி சாப்பிட கூடாது. மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை சாப்பிட வேண்டும். இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும் வெளியேறும் நீர் திவலைகள் வழியாக வைரஸ் பரவும். எனவே கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.