வேலூர், அக். 8 - வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு பிறகு தங்க வைக்கும் அறையின் உள்ளே மேற்கூரை சிறிது சிறிதாக பெயர்ந்து விழுவது கண்டு செவிலியர்கள் கர்ப்பிணி தாய்மார்களை அந்த அறையில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அதிக அளவில் பெயர்ந்து விழுந்ததைக் கண்ட கர்ப்பிணிகளும் நோயாளிகளும் அதிர்ச்சியடைந்தனர். நல்ல வேளையாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தியதால் எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. மேற்கூரை கீழே விழுந்ததால் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது. தரமற்ற முறையில் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோபத்துடன் தெரிவித்தனர்.