ஜோலார்பேட்டை, அக். 17- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லக்கூடிய பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல் துறையினர் அந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்.6 சீட்டு இருக்கை அடியில் இருந்த டிராவல் பையை சோதனை செய்த போது 18 சிறிய பண்டலின் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பெட்டியில் இருந்த ஒடிசா மாநிலம் சந்தன்பூர் பகுதியை சேர்ந்த கைலாஷ் பிஸ்வால் (46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒடிசா மாநிலம் குல்பானி பகுதியில் இருந்து பெங்களூருவில் விற்பனை செய்வதற்கு கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த 18 கிலொ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.