districts

img

கீழ்வேளூர் தொகுதி கீரநேரி ஏரியை ஆழப்படுத்த நாகை மாலி வலியுறுத்தல்

சென்னை,ஜன.6- கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள கீரநேரி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் வி.பி.நாகைமாலி,“ கீழ்வேளூர் தொகுதி, திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் உள்ள கீரநேரி ஏரியை ஆழப்படுத்த அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,“நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் உள்ளது திருப் பூண்டி என்ற ஒரு கிராமம். அந்த கிராமத்திற்கு மேற்கில் காமேஸ்வரம் பக்கத்தில் கீரநேரி எனும் பெரிய ஏரி இருக்கிறது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த ஏரி. அந்த ஏரியின் மேற்கு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. கிழக்கு பகுதியும் நாகை-வேளாங்கண்ணி ரயில்வே பணிக்கு மாவட்ட ஆட்சிய ரின் அனுமதியுடன் மண் எடுக்கப்பட்டு தூர் வாரப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக கிழக்கும் மேற்கும் தூர்வாரப்பட்டு கீரநேரி ஏரி ஆழப்படுத்தப்படும்” என்றார். நாகைமாலி, “கீழ்வேளூர் தொகுதி, திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் உள்ள காமேஸ்வரம் எனும் கிராமத்தில் கீரநேரி எனும் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மழைநீரால் நிரம்பக் கூடிய ஏரியாகும். இந்த எரி 2.50 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு பரப்பளவைக் கொண்ட ஏரி யாகும்.  ஏரியின் தண்ணீர் கொள்ளளவு 15.76 மில்லியன் கன அடியாகும். இதன் கரைகளின் நீளம் 4000 மீட்டராகும். இந்த ஏரி யிலிருந்து இரண்டு வழங்கு வாய்க்கால்களின் மூலம் 184.39 ஹெக்டேர் நெல் வயல்கள் பாசன வசதி பெறுகின்றன.  இந்த ஏரியை ஆழப் படுத்தி, அகலப்படுத்தி கரைகளை மேலும் உயர்த்தி நீரை சேமித்தால் இந்த ஏரியை சுற்றியுள்ள மேலும் கூடுதலான நிலங்களில் நெல் பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேலும் பயனடைவார்கள்” என்றார். அமைச்சர் துரை முருகன்,“ அவ்வாறே செய்யப்படும்” என்றார்.