districts

இரும்புலியூர் பீர்க்கன்கரணை ஏரி உபரிநீரை அடையாறு ஆற்றுக்கு திருப்பிவிடத்திட்டம்

தாம்பரம், ஜூலை 4-

    இரும்புலியூர், பீர்க்கன்கரணை ஏரிகளில் இருந்து வெளியே றும் உபரி நீரை  அடையாறு ஆற்றுக்கு திருப்பி விடும் வகையில் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.  இதற்காக முடிச்சூர் சந்திப்பு வரை சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.  

    இதற்கான திட்டப்பணி ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் இந்த பணிகளை தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தர்காஸ் சாலை அருகே அடையாறு ஆற்றில் இந்த உபரி நீர் சேரும் வகையில்  கால்வாய் கட்டப்படவுள்ளது. 1,200 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் இது அமைக்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வெள்ளப் பேரிடர் தடுப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளப் பெருக்கு குறையும் என்று எதிர் பார்க்கிறோம் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் வெள்ளப் பெருக்கை தடுக்கும் வகையில் கால்வாயின் சில பகுதிகளில் வெள்ள தடுப்பு சுவர்கள் கட்டவும் திட்ட மிடப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் அவசர கால பணியாக இந்த திட்டத்துக்கு அரசின் அனுமதி கோரப்பட்டு உள்ளது  என்றும் அவர்கள் தெரிவித்தனர்.