தனிச் செயலாளர் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்
சென்னை, மே 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி வருமாறு: எனது தனிச் செயலாளர் ஆர். தினேஷ்குமார் தந்தை நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரைச் சேர்ந்த டி.வி. ரவி ஞாயிறன்று (மே 12) மறைவுற்ற செய்தியால் வேதனையடைந்தேன். தன்னை வளர்த்து, சான்றோனாக்கிய தந்தையை இழந்து தவிப்பது எந்தவொரு மகனுக்கும் எளிதில் ஆற்றி விட முடியாத துயரமும், ஈடு செய்து விட முடியாத இழப்பாகும்.உயிர் கொடுத்து, உறு துணையாய் விளங்கும் தந்தையை இழந்து தவிக்கும் தினேஷ்குமாரின் துயரைப் பகிர்ந்து கொள்வ தோடு அவரது குடும்பத்தா ருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு சங்கம் உதயம்
செங்கல்பட்டு,மே 13- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் துவக்க விழா திங்களன்று (மே 13 ) செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் க.அறி தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.மனோகரன், செயலாளராக என். இளங்கோ, பொருளாளராக சி.ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.
மே 17 முதல் கொடைக்கானல் மலர் கண்காட்சி
சின்னாளபட்டி, மே 13- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61-ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா மே 17 ஆம் தேதி முதல் 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் விழா வில் தோட்டக்கலைத்துறை மூலம் மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப்படவு ள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
சென்னை, மே 13- சென்னை கோயம்பேட்டில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஷா.முஹம்மது ஆதம், கோயம்பேடு நெற்குன்றத்தில் ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரி கள் குடியிருப்பு அருகே ஒரு முட்புதரில் கடந்த 10ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கோயம்பேடு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த சில ரவுடிகளுக்கும், ஆதா முக்கும் இடையே முன்விரோதம் இருந்த தும், அந்த முன் விரோதத்தில் காரணமாக ஆதம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ச.கமலேஷ், விருகம்பாக்கம் இளங்கோ பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மு.திரு நாவுக்கரசு,மதுரவாயல் ஜெயராம் நகரைச் சேர்ந்த சி.செல்வா உள்பட 4 பேர் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆதம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கோபால் (23), சந்தோஷ் (22) ஆகிய 2 பேரை திங்கள்கிழமை கைது செய்த னர். அவர்களிடமிருந்து இரு கத்திகள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த வழக்குத் தொடர்பாக மேலும் இருவரை தேடி வரு கின்றனர்.
மாணவர்களுக்கு பிரியாணி விருந்து: புதுச்சேரி காவல்துறை அதிகாரி அசத்தல்
புதுச்சேரி,மே 13- புதுச்சேரியை அடுத்த பண்டைய பூர நல்லூர் கிராமத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் இளங்கோ ஊக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். அத்துடன் அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து மகிழ்வித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவ, மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். இதையொட்டி புதுச்சேரி அருகே தனது கிராமத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் நேரில் அழைத்து விருந்து வைத்ததுடன், ஊக்கப்பரிசு அளித்து கவுரவித்தார்.
நெய்வேலி சுப்பிரமணி லாக்கப் மரண வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
கடலூர்,மே 13- நெய்வேலி காவல் நிலையத்தில் நடந்த லாக்கப் மரண வழக்கில் கொலை குற்றச்சாட்டு இல்லாமல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தர விட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில், பட்டாம் பாக்கம் சுப்பிரமணியன் சந்தேகத்தின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக நெய்வேலி நகர காவல் நிலை யத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு 7 நாட்கள் காவல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்பு ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மரண மடைந்தார். இது குறித்து அவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட நெய்வேலி நகர காவல் நிலை யத்தில் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு, அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக விசாரணையை சிபிசிஐடி மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 218, 330, 343, 348 மற்றும் 304 (ஐஐ) பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, பாதிக்கப்பட்ட ரேவதியின் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமித்து வழக்கு நடத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முயற்சிகளை மேற்கொண்டது. இதை யடுத்து, ஜீவகுமார் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடலூர் விசாரணை நீதி மன்றத்தில், காவல் சித்திரவதைக்கு காரண மான காவலர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 22.8.2022 அன்று அனுமதிக்கப்பட்டது. கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை சட்டப்பிரிவு சேர்க்கப்படுவதற்கு எதிராக குற்றவாளிகளான காவலர்கள் ஆய்வாளர் ராஜா, துணை ஆய்வாளர் செந்தில்வேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசா ரணை செய்த உயர்நீதிமன்றம், கொலை பிரிவின் கீழ் பதிவு செய்த குற்றச்சாட்டு களை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ரேவதி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 10.5.2024 அன்று உச்ச நீதிமன்ற நீதியரசர் ஹரிகேஷ் ராய், நீதியரசர் பிரசாந்த் குமார், மிஸ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேவதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. சுரேஷ், பிரசன்னா ஆகியோர் ஆஜராகி, “ எந்த ஆதாரமும் இல்லாமல் சட்டவிரோதமாக சுப்பிர மணியை காவலில் வைத்து கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுத்தினர்” என்றனர். மேலும், சுப்பிரமணியை அடித்ததில் உடல் வீங்கி இருந்ததாகவும், இரண்டு கால்களிலும் கட்டை விரல் நகங்களில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு இருந்தது என்று மருத்துவ அறிக்கைகள் கூறி இருந்ததையும் விளக்கமாக எடுத்துரைத்தார். 2022 ஆம் ஆண்டில், பட்டியலிடப்பட்ட சாதி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டத்தின் கீழ் உள்ள சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வாளர் ராஜ ராஜன் என்கிற ராஜா, காவலர்கள் செந்தில் வேலன், சௌமியன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டை இந்திய தண்டனை சட்டத்தின் 302 (கொலை) பிரிவுக்கு மாற்றியது முற்றிலும் சரியானது என்றும் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினரின் மேல்முறையீட்டின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 2024 குற்றச்சாட்டுகளை மாற்றியதும் ரத்து செய்ததும் தவறு என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பட்டாம்பாக்கம் சுப்பிரமணியன் மரணம் சித்திரவதையால் நடந்ததா? என்பதை விசாரிக்க முடிவு செய்த உச்சநீதிமன்றம், கொலை குற்றச்சாட்டு இல்லாமல் கடலூர் விசாரணை நீதிமன்றம் நடத்தவிருந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர். மேலும், தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல் ஆகி யோர் 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க வும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் ஆய்வாளர் ராஜா தற்போது வடலூர் காவல் நிலையத்தில் பணி யாற்றி வருகிறார். அவரை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் காவலர்கள் ராஜா, செந்தில்வேல் ஆகி யோர் தாக்கல் செய்த மனுக்கு எதிராக, ரேவதியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், சங்கரசுப்பு ஆகி யோருடன் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார்கள்.