districts

சென்னை விரைவு செய்திகள்

தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில மாநாடு

புதுச்சேரி,ஜூன்.15- சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலளார் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரி முதலியார்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மது தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் மதிவாணன், அகில இந்திய சாலைபோக்குவரத்து சம்மேளனக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள்  ஜோதிபாசு, பணிமலர், ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பொதுப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு பாதகமான அம்சம் நிறைந்த போக்குவரத்து திருத்த சட்ட மசோதா 2019 ஐ கைவிட வேண்டும். பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஜூலை 31 ஆம் தேதி  புதுச்சேரி மாநில மாநாடு நடத்துவதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


சிறுத்தை கடித்து  15 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி,ஜூன்15- கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் அருகே சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் தனது விவசாய நிலத்தில் 15 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு ஒரே நேரத்தில் அனைத்து ஆடுகளும் கத்தியது. அப்போது அந்த பகுதியில் கிடை போட்டு இருந்த மற்ற விவசாயிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 15 ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் இறந்த ஆடுகளின் தொடை மற்றும் கழுத்து பகுதியில் மர்ம விலங்குகள் கடித்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விவசாயி கள் கூறுகையில், ஒரே மாதிரியாக ஆடுகள் இறந்து கிடப்பதை பார்க்கும் போது, கல்வராயன்மலை பகுதியில் இருந்து இறங்கி வந்த சிறுத்தை புலிகள் கடித்து இருக்கலாம். எனவே வனத்துறையினர் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.


சங்ககால கெண்டிமூக்கு பானை

கடலூர், ஜூன் 15- பண்ருட்டி அருகே எனதிரி மங்கலம் பகுதி தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்போது சங்க காலத்தைச் சேர்ந்த 2000 ஆண்டுகள் முற்பட்ட பழமையான கெண்டி மூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு ஆகியவற்றை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பகுதியில் இதுபோல கெண்டிமூக்கு பானைகள் நிறைய இருந்திருக்கலாம். அதற்கான தடயம்தான் உடைந்த கெண்டிமூக்குகள். இதுபோல கெண்டிமூக்கு பானைகள் தமிழகத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாய்வில் கீழடி, கொற்கை, உறையூர் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ளது என்றார்.


திருவண்ணாமலையில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 15- திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை யில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் கூட்டத்தில் வேளாண்துறை, விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கி அதிகாரிகள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கவுள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கை களை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என்று ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.


பலாப்பழம்  விலை வீழ்ச்சி:

பண்ருட்டி, ஜூன் 15- பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும். இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்கி உள்ளது. ஆங்காங்கே குவியல் குவியலாக பலப்பழங்கள் வைத்து நூற்றுக்கணக்கானோர் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு பலாபழம் 100 ரூபாய்க்குதான் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு ரூ. 300 வரை விலை போனது.