அம்பத்தூர், மார்ச் 10- ஆவடி - அம்பத்தூர் இடையே அண்ணனூர் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி, 33ஆவது வார்டுக்கு உட்பட்ட அண்ணனூர், ரெட்டிபாளையம், ஜோதி நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதி மக்கள் அம்பத்தூர், ஆவடி பகுதிகளுக்கு செல்ல பேருந்து வசதியின்றி சிரமப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் மாநகரப் போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மேற்கண்ட பகுதிக்கு பேருந்து சேவையை ஏற்படுத்த வலியுறுத்தினார். இதையடுத்து ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து புதிய ராணுவ சாலை, சின்னம்மன் கோவில் தெரு, ரெட்டிபாளையம், அண்ணனூர் ரயில் நிலைய சாலை, ஜோதி நகர், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக அம்பத்தூர் வரை புதிய வழித்தடத்தில் (தடம் எண்: எஸ் 41) பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய பேருந்து சேவையை நாசர் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்வில் ஆவடி மேயர் கு.உதயகுமார், மண்டலக் குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள் சண்.பிரகாஷ், பேபி சேகர், மாநகராட்சி உறுப்பினர்கள் வே.ஹரி, சத்யா ரவி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.