விழுப்புரம், செப்.12- மயானப் பாதையை மறித்து அமைக்கப்பட்ட இரும்புக் கதவு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பையொட்டி அகற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் நாயனூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மயானத்திற்கு செல்லும் பொதுப் பாதையை மறித்து சிலர் இரும்புக் கதவு அமைத்திருந்தனர். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட இரும்புக் கதவை அகற்றக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் மாவட்ட நிர்வாகம் அதை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் திங்களன்று (செப். 12) சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் தலைமையில் இரும்புக் கதவை அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ஜுனன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வட்டத் தலைவர் ஏழுமலை, வட்டச் செயலாளர் ராஜா ஆகியோருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த 11ஆம் தேதி அந்த இரும்புக் கதவை அகற்றினர். இதையடுத்து திங்களன்று நடைபெற இருந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சங்கத்தின் தொடர் முயற்சியால் இரும்புக் கதவு அகற்றப்பட்டதையடுத்து கிராம மக்கள், சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.