மேட்டுபாளையம், ஜூலை 8- ஊராட்சி தலைவர் ஒருவர் தனது சொந்த செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்றார். விமானத்தில் பறந்து சென்ற மாணவர்கள் சக மாணவர்களிடம் தங்களது அனுபவத்தை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருக்கும் கண்ணார்பாளையம் என்னும் கிராம பகுதியில் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி குழந்தைகளை அவர்களது கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேரகன் கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து சென்றுள்ளார்.
சென்னை சென்றவுடன் அண்ணா நூலகம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இது குறித்து ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில்: ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கனவை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன். வசதி படைத்தவர்கள் இதே போல் தங்களின் அருகாமையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றால் நன்றாக இருக்கும். இந்தாண்டு 75 மாணவர்கள், 75 பெற்றோர்கள், 15 ஆசிரியர்கள் என விமானத்தில் அழைத்து செல்ல உள்ளேன். இது அடுத்த ஆண்டும் தொடரும் என்றார்.
இது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்: சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். இதோடு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீரூடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார். இதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இவர்களை 3 ஆவது ஆண்டாக விமானத்தில் சொந்த செலவில் அழைத்து சென்று வருகிறார் இது இங்கு படிக்கும் மாணவ மாணவியரை பெரிதும் ஊக்குவித்து வருகிறது என்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில்: விமானத்தில் சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே இதுவரை பார்த்துள்ளோம். அதில் நாமும் பயணிக்க முடியும் என நினைத்தது கூட இல்லை. ஆனால் நாங்களும் விமானத்தில் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.