காவிரி டெல்டா மாவட்டங்களில் கடலோரப் பகுதியில் இயற்கை அரணாக விளங்கும் அலையாத்தி காடுகளின் பரப்பளவை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் தொடங்கி, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கிழக்குப் பகுதி வரை கடற்கரையோரத்தில் உள்ள சதுப்புநிலப் பகுதியில் ஏறத்தாழ 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் பரந்து விரிந்துள்ளன.
2014இல் சுனாமி பேரலை தாக்கியபோது இந்த காடுகள் உள்ள பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல 2018-இல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயல் பாதிப்பின் போது மட்டும் சில சேதங்கள் இருந்தன. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வலசை வருகின்றன. அலையாத்திக் காடுகள் அமைந்துள்ள லாகூன் என்ற காயல்பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகையான நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தம் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக அதிகமாக பூநாரை, கூழக்கடா, நீர்க்காகம், ஊசி வால்வாத்து, குளத்துக்கொக்கு, வெண்கொக்கு போன்றவை இப்பகுதிக்கு வரு கின்றன. இந்தியாவில் முதன்முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்திக் காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் பாதைகள் அமைக்கப்பட்டும் ஓய்வெடுப்பதற்கு குடில்கள் ஏற்படுத்தப்பட்டும் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. மீன், நண்டு, இறால், அரிய மெல்லுடலிகளான சிப்பிகள் ஆகியவற்றின் இனப் பெருக்க பகுதிகளாகவும் இவை விளங்குகின்றன. இங்கு வனத்துறை மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் இந்த காடுகளின் பரப்பளவை அதிகரிக்க போதுமான நடவடிக்கைகள் தமிழக அரசின் வனத்துறையால் எடுக்கப் படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் திருவாரூர் மாவட்ட வனத்துறையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு துறை சார்பில் அளிக்கப் பட்ட பதிலில், 2019-20-ஆம் ஆண்டில் 50ஹெக்டேரில் புதிதாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும், 2020-21-ஆம் ஆண்டில் நடவுப்பணிகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும், ஆண்டுதோறும் இதற்கென அரசு எந்தத் தொகை யும் ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் இப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு காரணங்களால் அழியும் நேர்த்தியான இந்த காடுகளின் பரப்பளவை மீண்டும் அதிகரிக்கவும் தாவரங்களை நடவு செய்யும் பணிகளையும் வனத்துறை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. இயற்கை அரணாக வும். சுற்றுச்சூழலுக்கும், உயிரி பன்முகத் தன்மைக்கும் உகந்ததாகவும் திகழும் இந்த அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க உரிய நடவடிக்கை களை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுகுறித்து வனத்துறை வட்டா ரங்களில் கேட்டபோது, இது தொடர்பாக உரிய ஆய்வுகள் நடத்தி, நடவடிக்கை கள் மேற்கொள்ள முயற்சிகள் எடுத்து வருகின்றோம் என்கின்றனர். இருப்பினும் இது போதுமானது அல்ல என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.