சேலம், ஏப்.7- ஏற்காட்டில் சாலையோர வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்த கூடாது என வலியுறுத்தி சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஒண்டிக்கடை பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்து, ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் சாலையோரம் சிறு கடைகளை நடத்தி தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் ஏற்காடு பகுதியில் சாலையோர கடைகளை வைக்க அனுமதி மறுத்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் தனசேகர் தலைமையில் சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, தொழிலாளர் சங்க தலைவர் கண்ணாடி ராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க கிளை செயலாளர் ராஜேந்திரன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். நிறைவாக சிஐடியு மாவட்ட நிர்வாகி விஜயலட்சுமி நன்றி கூறினார். இப்போராட்டத்தில் ஏற்காடு பகுதியை சேர்ந்த எண்ணற்ற சாலையோர வியாபாரிகள் பங்கேற்றனர்.