districts

img

யானை வரும் பின்னே சைரன் ஓசை வரும் முன்னே - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மனிதக் குறுக்கீடுகள் மூலம் அதிகம் பாதிக்கப்படும் வன விலங்குகளில் யானைகள் முக்கியமானவை. ஆசிய யானைகள் அதிகம் வாழும் இந்தியாவில் மனித யானை மோதல்களால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான யானைகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன. இதற்குத் தீர்வு காணும் வழி ஒன்றை ஒடிசா வனத்துறை கண்டுபிடித்துள்ளது.

யானை வந்தால்  போக்குவரத்து நிற்கும்

யானைகள் செல்லும் பாதைகளில் அவை வருவதை உணர்ந்து சைரன்கள் அமைதியாகும். போக்குவரத்து நிறுத்தப்படும். யானைகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இத்திட்டம் ராசிங்கா, ஹால்டிஹாபஹல் என்ற இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா வனத்துறை இதற்காக நடத்திய பரிசோதனை முன்னோட்டங்கள் வெற்றிபெற்றுள்ளன.

மனித யானை மோதல்

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் நிலவும் பதட்டத்தைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்று தேன்கனல் வனப்பிரிவு அதிகாரிகள் நம்புகின்றனர். அகச்சிவப்புக்கதிர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த சைரன்கள் பாதையின் வழியாக நடந்துசெல்லும் யானைகளின் உருவம், வடிவம், அளவு போன்றவற்றை உணரும் திறன் பெற்றவை. யானைகள் அருகில் வரும்போது சைரன் ஒலிப்பது நின்றுபோகும். உடனடியாக அருகில் இருக்கும் போக்குவரத்து அமைப்புகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.

சாலையைக் கடந்துசெல்லும் யானைக் கூட்டங்கள்

வாரத்திற்கு மூன்று நான்கு முறை யானைகள் இப்பகுதிகளில் தேசியப்பாதையை கடந்துசெல்கின்றன. வாகனங்கள் மோதுவதால் யானைகளுக்கு சம்பவிக்கும் ஆபத்துகளை மனதில் வைத்தே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசியப்பாதை கடந்துசெல்லும் இரண்டு இடங்களிலும் பரிசோதனைரீதியில் இது வெற்றிபெற்றுள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தானியங்கி சைரன்கள்

சைரன் தன் இயக்கத்தை தானியங்கி முறையில் நிறுத்திக்கொள்வது கூட்டமாக வரும் யானைகள் மற்றும் ஒற்றையாக வரும் யானைக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி ஆராயப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒடிசாவின் முக்கிய யானைப்பாதை

ஒடிசாவின் தேன்கனல் வனப்பகுதி யானைகள் கடந்துசெல்லும் 5 பாதைகள் கொண்ட முக்கிய பகுதி. மாநிலத்தில் 2017-18இல் 434 யானைகள் உயிரிழந்தன. இதே காலத்தில் 531 மரணங்கள் மனித -யானை மோதல்களால் ஏற்பட்டுள்ளன என்று  ஒடிசா வன உயிரிகள் பாதுகாப்பு சங்கம் (Wildlife Society of Odissa) கூறுகிறது.

உயிர் பிழைக்குமா யானைகள்?

காடுகள் விவேகமற்றமுறையில் அழிக்கப்பட்டதால் வாழிடம், நடமாட்டம், உணவு, நீர், சமூக வாழ்வு என்று பலவகைகளில் பாதிக்கப்பட்டு அவதிப்படும் யானைகள் அநியாயமாக உயிரிழப்பதைத் தடுத்து நிறுத்த இத்திட்டம் உதவும் என்று  நம்பப்படுகிறது.