districts

img

ஒரு நோயாளியின் வேண்டல் - அண்டனூர் சுரா

நான் சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளி. தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறவன். அண்மையில் மாத்திரை வாங்குவதற்காக அரசு மருத்துவமனையில், வரிசையில் நின்று மருத்துவரைச் சந்தித்தேன். வரிசையில் நிற்கையில் எதிர்பாரா விதமாக, போன் வந்துவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவித்து, சுவிட்ச் ஆப் செய்துகொண்டேன். 

எனக்கு முன்பு இரு முதியவர்கள், வரிசையில் நின்றார் கள். அவர்கள் விலகிய பிறகு, என் மாத்திரை குறிப்பு நோட்டையும், தனியார் இரத்த பரிசோதனை நிலையத்தில் செய்துகொண்ட இரத்த பரிசோதனை அறிக்கையையும் மருத்துவரிடம் நீட்டினேன். இளம் பெண் மருத்துவர் அவர். மருத்துவ நோட்டை வாங்கியபடி, “ என்ன செய்கி றீர்கள்?”, எனக் கேட்டார். “ எனது தொழிலைச் சொன்னேன்” என்றேன். எனது தொழிலைச் சொல்லி, மனம் நோகும் படியாகப் பேசினார்.  என் உயர் இரத்த அழுத்தம் சட்டென பல்மடங்காக அதி கரித்தது. எனக்கு படபடப்பு வந்தது. அரசு மருத்துவ மனைக்கு வந்தது தவறோ? பதிலுக்கு ஒன்றும் நான் பேச வில்லை. அவரது முகமே எனக்கு பிடிக்காமல் போய்விட்டது. அவரிடம் கொடுத்த இரத்த பரிசோதனை மற்றும் மருத்துவ குறிப்பு நோட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வரிசையிலிருந்து வெளியேறினேன். நான் என்ன தவறு செய்தேன்? அத்தனை பொறுமை யாக வரிசையில் நின்று, அந்த மருத்துவரைச் சந்தித்தேன். எதிர்பாரா விதமாக போன் வந்ததற்காக அதற்காக வருத்த மும் கூட தெரிவித்தேன். எனது உடல்நிலை குறித்து அவரி டம் சொல்லிக்கொண்டிருக்கையில், அதைக் காது கொடுத்து கேட்காமல், அவ்வளவு பேருக்கும் முன்பு, அப்படியாகச் சொல்லிவிட்டாரே, அச்சொல் என்னைக் கொல்லாமல் கொன்றுகொண்டிருந்தது.

எனக்கு மயக்கமும், வாந்தியும் வந்தது. மனதை மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு சற்று நேரம் அங்கேயே ஓய்வு கொண்டேன். சற்று நேரத்தில் அங்கு ஓர் ஆண் மருத்துவர் வந்தார். அவரிடம் சென்று, பரிசோதனை அறிக்கையைக் காட்டி மாத்திரை வாங்கிக்கொண்டு, பணிக்குத் திரும்பினேன். அன்றைக்கு முழுவதும் என்னால் இயல்பாக இயங்க முடியவில்லை. அந்த இளம் மருத்துவர் கேட்ட அந்தக் கேள்வி, என் மனதைப் பெரிதும் வதைப்பதாக இருந்தது.  மாலை ஏழு மணியளவில் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போது பணியிலிருந்த மருத்துவரைச் சந்தித்து, நடந்ததை விளக்கினேன். இதை, அப்பொ ழுதே தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் செய்தி ருக்கலாமே, என்றார். நான் இருந்த பதட்டத்தில் அப் பொழுது சொல்லியிருந்தால், ஏதேனும் ஒரு சொல் அந்த மருத்துவரைக் காயப்படுத்துவதாக இருந்திருக்கும். வரி சையில் நிற்கும் எத்தனையோ வயதான நோயாளி களுக்கு இடையூறாக இருந்திருக்கும். அவரது பணியில் குறுக்கீடு செய்வதாக அமைந்திருக்கும். நான் உளவியல் படித்திருக்கிறேன். உடனடி செயலாற்றலும், பதிலுக்குப் பதிலும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர் மத்தியில் சரியென தோன்றக் கூடலாம். காயம்பட்ட மனதுக்கு ஒரு காலமும் அது மருந்து ஆகாது. அது, நல்ல முறையும் அல்ல. அதனால் தான் அப்பொழுது முறையிட வில்லை. இப்பொழுது கூட இதை ஏன் நான் உங்களிடம் சொல்கிறேன் என்றால், சொல்வதன் மூலம் என் மனப்பாரம் சற்றே குறையும் என்றுதானே தவிர, இப்படியான சொற்களை இனி வேறு யாரிடமும் உபயோகிக்காதீர்கள், என்றுதானே தவிர வேறு எதற்காகவும் இல்லை, என்றேன். நாளை காலை தலைமை மருத்துவரிடம் சொல்லுங்கள், என்றார். வீடு திரும்பினேன்.

அன்றைய இரவு, என் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. மருத்துமனையின் பெயரைச்சொல்லி, அவரது பெயரையும் சொல்லி, தலைமை மருத்துவ அதிகாரி பேசுகிறேன், என்றார். உங்கள் எண்ணைக் கேட்டுப்பெற இவ்வளவு நேரமாகிவிட்டது. காலையில் மருத்துவமனை வந்தீர்களா, அங்கு என்ன நடந்தது சொல்லுங்கள், எனக் கேட்டார். எதையும் மறைக்காமல் நடந்ததைச் சொன்னேன். சற்றே மூச்சு வாங்கிய அவர், “முதலில் நடந்த இந்த சம்ப வத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஒருவர் செய்யும் தவறுக்கு இன்னொருவர் மன்னிப்புக் கோருவது, எவ்வளவு வலியானது! அப்படியாக அவர் கேட்கிறார் என்றால் அவரது இதயம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். எனக்கு அந்நேரத்தில் அண்ணல் காந்தி யும் அன்னை தெரசாவும் நினைவுக்கு வந்தார்கள். “ அய்யோ அம்மா, ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை. அதெல்லாம் வேண்டாம் “ என்றேன். “இல்ல சார், எந்தவொரு மருத்துவரின் சொல்லும், அவர் தரும் மருந்தும் நோயின் வீரியத்தைத் தணிப்ப தாகவே இருக்க வேண்டும். நோயின் வீரியத்தை மேலும் கூட்டுவதாக இருந்துவிடக் கூடாது. நான் சைக்ளாஸ்சிஸ்ட். எனக்குத் தெரியும், ஒரு சொல் ஒரு மனிதனை எந்தளவு வதைக்கும் என்று. காலையில் நடந்த ஒரு சம்பவத்தை மாலையில் வந்து சொல்கிறீர்கள் என்றால் அச்சொல் எந்தளவு உங்களைப் பாதித்திருக்கும். இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்க வேண்டும், அதற்காகத்தான் இந்த  ராத்திரியில் உங்களிடம் பேசுகிறேன். நடந்த சம்பவத்திற் காக திரும்பவும் மன்னிப்பு கோருகிறேன். நிம்மதியாகத் தூங்குங்கள் “ என்றார்.

என் கண்கள் கலங்கிவிட்டன. அவ்வளவு நேரம் எனக்குள் கனத்துக்கொண்டிருந்த ஒரு சுமை சட்டென இறங்கிவிட்டிருந்தது. இரவு நன்றாக தூங்கினேன். இந்தத் தூக்கம், அந்த தலைமை மருத்துவ அதிகாரி, எனக்குத் தந்ததாக இருந்தது. அவர் மீது அன்பு மேலோங்கியது. அவர் அன்பாக உபயோகித்த சொற்க ளுக்குப் பரிசாக எதையேனும் கொடுக்க வேண்டும், போலிருந்தது. இந்த எழுத்தாளனிடம் புத்தகம் தவிர வேறென்ன உண்டு. “ ஒரு நாள் தூக்கம் தருவித்த தலைமை மருத்துவ அதிகாரிக்கு நன்றி” என எழுதி கையெழுத் திட்டு அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். தலைமை மருத்துவர் என்னை நாற்காலியில் அமர்த்தி, நடந்த சம்பவத்திற்காக பெரிதும் வருந்தி, திரும்பவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு என்னை அழைத் துக்கொண்டு, அந்த இளம் பெண் மருத்துவரிடம் சென்றார். அவருடன் கூட பணியாற்றும் மூன்று மருத்துவர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் அச்சம்பவம் நடக்கையில், கூட இருந்தவர். மற்றொருவர், மாலையில் நான் சந்தித்த  மருத்துவர். அறையின் கதவைச் சாத்திக்கொண்டு, இவரைத் தெரிகிறதா? எனக்கேட்டார். அந்த இளம் மருத்து வர் தெரியவில்லை, என்றார். இவர் அரசு ஊழியர். அரசு மருத்துவமனை மீதும், அரசு மருத்துவர்கள் மீதான நல்ல அபிப்ராயத்தின் பேரிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறார். அவரது மனம் புண்படும்படியாக நடந்தி ருக்கிறீர்கள். மருத்துவராகிய நமது வேலை நோயின் வீரியத்தைத் தணிக்க வேண்டியதே தவிர அதன் வீரியத்தை அதிகப்படுத்துவது அல்ல. ஒரு நோயாளிக்கு மருத்துவர் தரும் மருந்தை விடவும் அன்பு உச்சரிக்கும் சொற்களும், அரவணைப்பும் மேலானது. அவரது மனம் புண்படும்படியாக பேசியிருக்கிறீர்கள். அவரது மனதைப் புண்படுத்த நாம் யார்? எவ்வளவு பெரிய வார்த்தை இது! இவரிடம் மட்டுமல்ல, யாரிடமும் இப்படியாக பேசா தீர்கள். எந்த நோயாளியையும் அலட்சியமாக பார்க்கா தீர்கள். எந்த நோயாளியையும் மனம் புண்படும்படியாக நடக்காதீர்கள், என்பதாக அறிவுரை செய்தார். 

இதற்கு அந்த இளம் மருத்துவர் என்ன வினையாற்றப் போகிறார், என எதிர்பார்த்தேன். அவரோ, அப்படி யெல்லாம் நான் பேசவே இல்லை, என்றார். நீங்கள் ஏதே னும் சொல்ல விரும்புகிறீர்களா, எனக்கேட்டார் தலைமை மருத்துவர். நோயாளிகளை அன்பாக கையாளுங்கள். அன்பு ஒன்றே எல்லாவற்றிலும் மேலானது, என்றேன். தலைமை மருத்துவ அதிகாரி நடந்த சம்பவத்திற்காக, திரும்பவும் மன்னிப்பு கேட்டார். அந்த இளம் மருத்துவர் கடைசி வரை அதற்காக இரங்கவோ, வருந்தவோ இல்லை. என்னிடம் அவர் வருத்தம் தெரிவிக்க அவரது உதடுகள் கூசியிருக்கலாம். காரணம், அவரை விட நான் வயதால் மூத்தவன் என்றா லும் அவர் அளவிற்கு நான் படித்தவனில்லை. ஆனால், அவருக்காக மன்னிப்பு கேட்ட, அவரது அதிகாரியிடம் குறைந்தபட்சம் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஒரு சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கேட்பதும் இன்றைய இளைய தலைமுறையிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை, என நினைத்தவனாய், தலைமை மருத்துவ அதிகாரியைக் கையெடுத்து கும்பிட்டபடி, மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன்.

இப்போது எனக்கு அந்த மருத்துவர் மீது கோபமோ, வருத்தமோ கடுகு அளவிற்கேனும் இல்லை. அவரும் ஒரு வகையில் பாவம்தான். அவருக்கு என்ன பிரச்சனையோ? எனக்கு முன்பு வரிசையில் நின்ற நோயாளிகளில் எத்தனை பேர் அவரை கோபப்படுத்தினார்களோ! அவருக்காக நான் இரங்கவே செய்தேன்.  மருத்துவத்துறை மருத்துவ அறிவோடு நோயாளி மன உளவியலையும் சேர்த்து பாடம் புகட்டினால் நல்லது, என்று தோன்றுகிறது. ஏன் நீட் தேர்வில் கூட மனவி யல் சார்ந்த கேள்விகள் கேட்கலாம். அல்லது நோயாளி களுக்கு ஒரு மருத்துவர் முன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், என குறைந்தபட்ச வழிகாட்டு நெறி முறைகளைத் தெரிவிக்கலாம். நோயாளிகளை வரிசைப் படுத்த, இடைவெளி விட்டு நிறுத்த ஊழியர் நியமிக்கலாம். எப்படியாயினும் நோயாளிகள் மீது ஒரு மருத்துவர் கோபப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியவில்லை. ஒரு படித்த பட்டதாரிக்கே இந்த நிலை என்றால், தினம் தினம் மருத்துவமனையில் கால் கடுக்க நிற்கும் அப்பாவி, பாமர மக்களின் நிலையை இந்த இடத்தில் நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

மருத்துவத்துறைக்கு அன்பான ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை மட்டுமே அள்ளிக்கொடுக்காமல், நோய்களை ஆற்றுப்படுத்தும் இதமான சொற்களையும் கண்டுபிடித்து வழங்குங்கள். அன்றைக்கு என் இரத்த அழுத்தத்தைத் தணித்தது, மருந்தோ மாத்திரையோ அல்ல. அந்த தலைமை மருத்துவ அதிகாரி எனக்களித்த ஆறுதலான சொற்களே!

;