districts

img

நீர்வரத்து உயர்வு:  வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, அக். 17- கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,609 கனஅடியாக உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து விநாடிக்கு 13,508 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி உட்பட 5 மாவட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்துள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை விநாடிக்கு 12,609 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 13,508 கனஅடி தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், அவ்வழியே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித் துறையி னர் அறிவுறுத்தியுள்ளனர். பொதுப்பணித் துறை, வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

;