districts

கூரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

காஞ்சிபுரம், செப்.8-  காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் பகுதியில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். தெற்கு ரயில்வே காஞ்சிபுரம் மாவட்ட பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ரயில்வே அமைச்சக பயணிகள் வசதிகள் குழு உறுப்பினர் ரவிச்சந்திரனிடம்  பொதுமக்கள் சார்பில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:- தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே கோட்டங்களான சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே கோட்டங்களின் கீழ் இயங்கி வரும் ரயில் நிலையங்களில் ரிசர்வேஷன் கவுண்டர் காலை 8 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. இதனை மாற்றி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு மையத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். காலை 5.25 மணிக்கு செங்கல்பட்டில் புறப்படும் மின்சார ரயில் காஞ்சிபுரம் வழியாக 6.30 மணிக்கு திருமால்பூர் சென்றடையும் மின்சார ரயில், இரவு 9 மணிக்கு திருமால்பூரில் புறப்படும் மின்சார ரயில் 10 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் மின்சார ரயில் கொரோனா பாதிப்பு காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில்களை மீண்டும் இயக்கப்பட வேண்டும்.  சென்னை கடற்கரை - சென்னை சென்ட்ரல்  வட்டவடிவ ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். சென்னை கோட்டத்தில் காஞ்சிபுரம் - திருமால்பூர் மார்க்கத்தில் கூரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று  செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு - வாலாஜாபாத் - காஞ்சிபுரம் - திருமால்பூர் வழித்தடத்தில் கூடுதலாக மேலும் ஒரு ரயில்பாதை அமைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.