districts

img

கள்ளக்குறிச்சி ஆட்சியர், எஸ்பியை கைது செய்க!

கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரி ழப்புகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நாகை மாலி எம்எல்ஏ பங்கேற்று பேசியதாவது:-

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் இந்த நேரத்தில், நெஞ்சை உலுக்கும் கள்ளக்குறிச்சி துயரச் சம்பவம் இந்த அரசு மீது மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.

வாழ்க்கைக்கு உத்தரவாதம் தேவை

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அமைச்சர்களை அனுப்பி வைத்ததோடு, 10  லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்ததும் நல்லது தான். அது மட்டுமே தீர்வாகாது. பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்து கொடுப்பதை உத்தரவாதப் படுத்த வேண்டும்.

அங்கு நடந்த கோர சம்பவத்தில் முக்கிய காரணமாக கூறப்படுவது, கல்வராயன் மலைப்  பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளத்தனமாக சாராய தொழிற்சாலையே இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. 

முக்கிய குற்றவாளிகள் தப்பிக்ககூடாது

இந்த துயர நிகழ்ச்சிக்கு சில்லரை வியாபாரி களை மட்டுமே காரணம் ஆக்கக்கூடாது. இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்கவர்களையும் கண்டறிந்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். இது போன்றவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவது சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

காவல்துறையே உடந்தையா?

காவல் நிலையம், நீதிமன்றம் என்று முக்கிய இடங்கள் அமைந்திருக்கும் கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியில் இந்த கள்ளச்சாராய விற்பனை பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி? அப்படியென்றால், காவல்துறையே இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கும் இந்த  சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியர் இடமாற்றம், காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இது மட்டுமே தண்டனை அல்ல. இவர்கள் இருவர் மீதும் கொலைக் குற்றத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

“மதுக்கடைகள் இருந்தால் கள்ளச்சாராயம் குறையும் என்பது பொதுவான லாஜிக்” என்று  தினமணி தலையங்கம் தீட்டியிருக்கிறது. இதை தமிழ்நாடு முதல்வர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாகை மாலி எம்எல்ஏ  பேசியுள்ளார்.


 

;