கரூர், செப்.5 - தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூர் உழவர் சந்தையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் ம.பா.விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சி.கண்ணன் வரவேற்று பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.நம்பிராஜன் வேலையறிக்கையை முன்வைத்தார். மாநிலப் பொருளாளர் கோ.ஆ.அசோகன் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட தலைவர் மு.சுப்ரமணியன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கத்தின் மாநில செயலாளர் மு.செல்வராணி ஆகியோர் பேசினர். மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்து நிர்வாக ஊழியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் தோற்றுவித்து அதற்குரிய அனைத்து நிர்வாக ஊழியர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும். அனைத்து நிலை நிர்வாக ஊழியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும். நீதிமன்ற வழக்கினால் தாமதப்படுத்தப்படும் அலுவலக கண்காணிப்பாளருக்கான பதவி உயர்வினை, உடனடியாக வழங்கிட அடிசினல் அட்வகேட் ஜெனரலை சந்தித்து வழக்கினை விரைந்து முடித்து பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறையை முற்றிலுமாக கைவிட்டு, அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் ந.மணிமாலா நன்றி கூறினார்.