districts

img

மத வெறுப்பை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய பாஜக ஆதரவாளர் கைது

ஒடிசா ரயில் விபத்து குறித்து பொய்யாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பாஜக ஆதரவாளரான, வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர்,தக்கலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஒடிசாவில் கடந்த ஜூன் 2, வெள்ளியன்று நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தால் ஒட்டுமொத்த நாடே பெரும் சோகத்தில் இருக்கும் நேரத்தில், சங்பரிவாரத்தினர் தொடர்ந்து சமூக வலைதளங்கில் பொய் செய்திகளை வைத்து, மதவெறுப்பை பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில், விபத்து நடந்த இடத்தின் அருகே மசூதி ஒன்று உள்ளது. விபத்து நடந்த தேதி வெள்ளிக்கிழமை அதனால் அன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு இருப்பார்கள். எனவே இந்த ரயில் விபத்திற்கு இஸ்லாமியர்களின் சதிச்செயல் தான் காரணம் என்று சங்பரிவாரத்தினர் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பினர்.ஆனால், அவர்கள் மசூதி என்று கூறிய இடத்தில் இருந்தது கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோயில் என்பது தெரியவந்தது.

மேலும், ஒடிசா ரயில் விபத்து சதிச்செயல்களால் தான் நடந்து இருக்கிறது என்று ஆதரமற்ற குற்றச்சாட்டு பதிவுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாஜக ஆதரவாளரான செந்தில்குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று இட்டு இருந்தார்.அதில், இதுவரை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர்.விபத்து நடந்த ரயில் நிலையத்தின் பெயர் பஹாநாகா. இந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் அகமது.விபத்து குறித்து விசாரிக்க..’ எனக் குறிப்பிட்டதுடன். ஸ்டேஷன் மாஸ்டர் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்திருந்தார். பின்னர், தான் போட்ட இந்தப் பதிவு தவறானது என்றும், யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும் எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்,அவர் பரப்பியது பொய் செய்தி என்பது தெரியவந்துள்ளது.

முஸ்லீம் ஒருவர்மீது மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செந்தில்குமார் பதிவிட்டதாக தினேஷ்குமார் என்பவர் நேற்று (07.06.2023) போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் தக்கலை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, பாஜக ஆதரவாளரான செந்தில்குமாரை தக்கலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.