districts

வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன் முறையாக நிரம்பியது

சிதம்பரம்,ஜன.25- கடலூர் மாவட்டம் , காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இதில் 1.46 டி.எம்.சி. வரைக்கும் தண்ணீரை தேக்கி வைக்கமுடியும். ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். இது சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாராமாகவும் திகழ்கிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்திலுள்ள கீழணையிலிருந்து வடவாறு வழியாக நீர் வரும். கடந்த ஆண்டில் மழை பெய்யாத மாதமே இல்லை. இதனால் வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டே இருந்தது. இதனால் வீராணம் ஏரி கடந்த ஆண்டு மட்டும் 6 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கதாகும்.  ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நெல் உட்பட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியான பணிகள் கிடைத்தது. காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தற்போது அறுவடை முடிந்த நிலையிலும், வடவாறு வழியாக ஏரிக்கு நீர் வந்து கொண்டே உள்ளது.  இந்நிலையில், வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான (1.46 டி.எம்.சி.) 47.50 அடியை எட்டியது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனால் சென்னை நகருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.