court

img

உச்சநீதிமன்றத்தில்  வழக்கறிஞர் சுதா பரத்வாஜூக்கு எதிராக  என் ஐஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி 

 

புதுதில்லி,

எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கறிஞர்  சுதா பரத்வாஜுக்கு வழங்கிய  பிணையை எதிர்த்து  தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் பீமா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோரேகான் கிராமத்தில் 1818-ம் ஆண்டு, மராத்தியா பேஷ்வா படைக்கும், ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் போர் நடைபெற்றது. இதில் கிழக்கிந்தியப் படையில் இடம்பெற்றிருந்த 49 பட்டியல் இன மக்கள் கொல்லப்பட்டனர். 

மராத்தா பேஷ்வாக்களை வீழ்த்தியதில் துணை புரிந்து இறந்து போன மகர் சமூகத்தினரைப் பெருமைப்படுத்தும் விதமாக 1851 ஆம் ஆண்டில் பீமா-கோரேகான் கிராமத்தில் ஆங்கிலேயர்கள்  நினைவுத்தூணை எழுப்பினர்.  அதற்குப் பீமா-கோரேகான் நினைவுத்தூண் எனப் பெயரிடப்பட்டது. அங்கு ஆண்டு தோறும் எல்கர்பரிஷத்  என்ற பெயரில் மக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். 

வழக்கம் போல்  கடந்த 2017ம் ஆண்டிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய ஆதிக்க சாதியினர் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் இணைந்து  மறுநாள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஆனால் மகாராஷ்டிரா அரசு  உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருந்து வந்த  சமூக செயற்பாட்டாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களுமான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா, வரவர் ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோர்  மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து  16 பேரைச் சிறையில் அடைத்தது.  இந்த வழக்கை தற்போது  தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் வழக்கறிஞர் சுதாபரத்வாஜ்க்கு மும்பை உயர்நீதிமன்றம் டிசம்பர் 1ம் தேதி பிணை வழங்கியது. உடனே மத்திய அரசு இந்த பிணையை எதிர்த்து என்ஐஏ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று ( டிசம்பர் 7 ) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திரபட், யு.யு.லலித் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, '' மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவில் தலையிடுவதற்கு எக்காரணத்தையும் நாங்கள் இந்த மனுவில் காணவில்லை'' என்று கூறி என்ஐஏ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

 

;