court

img

கொரோனா பரவலால் சிறையிலிருந்து விடுவித்தவர்களை சரணடைய கூறக்கூடாது.... மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
கொரோனா பரவல் அச்சுறுத்தலால் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சரணடைய கூறக்கூடாது என்றும்மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,  விடுவிக்கப்பட்டோரை சரணடையுமாறு மாநில அரசுகள் உத்தரவிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 கொரோனா பரவலால் சிறைகளில் நெருக்கமாக கைதிகள் இருப்பது பற்றி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அச்சமயம் சிறைகளில் கொரோனா பரவலை தடுக்க விசாரணை கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒவ்வொருமாநிலமும் உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்து கைதிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுத்து செயல்படுத்தின.இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், உயர்நிலைக்குழு முடிவுப்படி விடுதலை செய்யப்பட்ட கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டாம்.  வயது, இணை நோய் பாதிப்பு உட்பட எந்தஅடிப்படையில் கைதிகளை விடுவிக்க முடிவு செய்த விவரத்தையும்  தண்டனைக்கைதிகளில் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவு எந்தளவிற்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது என்ற அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றம் வழங்கும் ஜாமீன் உத்தரவுகளை மின்னணு தகவல் பரிமாற்றம் மூலம் சிறை அதிகாரிகளுக்கு அனுப்ப யோசனை தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் உத்தரவுகளை அஞ்சல் மூலம் அனுப்புவதால் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசனை நடத்தியது. மின்னணு தகவல் தொடர்பு மூலம் உத்தரவுகளை அனுப்ப புதிய திட்டத்தை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;