கல்லூரி அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்வி நிலையங்கள் தற்போது வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில்மனுவில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வரும் 20-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவில்,
கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்த வேண்டும் கூறப்பட்டுள்ளது.